மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவி

(படுவான் பாலகன்) சாதனை எல்லோரும் புரிந்துவிடமுடியாது. அதேநேரம் இலகுவான காரியமுமல்ல. அவற்றினை சாதிக்கும் சாதனையாளர்கள் பாராட்ட, கௌரவிக்க, தட்டிக்கொடுக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறானதொரு சாதனையை பாடசாலை ரீதியாக நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில், பன்சேனை பாடசாலையைச் சேர்ந்த வசந்தினி என்ற மாணவி மூன்று போட்டிகளில் முதலிடத்தினை பெற்று அண்மையில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளாள். வறுமை என்பது சாதனைக்கு தடையல்ல என்பதை தகர்த்தெறிந்து சாதனை படைத்துக் காட்டியுள்ளாள்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கிராமங்களே பலருக்கு பழகிப்போனதொன்றாகி விட்டன. ஏனைய கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருகின்றதோ? என்று தெரியாமலே பலர் இருக்கின்றனர். நகரங்கள் எல்லோருக்கும் பழகிவிட்ட பெயர்கள். அதேபோல அசம்பாவிதங்கள் நடந்த பகுதிகளும் இன்றும் மறவாத நினைவுகளை கொடுக்கும் இடங்களாகவுள்ளன. அவைகளை கடந்தும், மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை எனும் நிலப்பரப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பரிவில் அமைந்துள்ள கிராமம் பன்சேனை கிராமமாகும்.
யானையின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் கிராமம் என்ற ரீதியில் பெயர்போன கிராமமுமாகும். இங்கு பன்சேனை பாரி வித்தியாலயம் என்ற பாடசாலையும் அமைந்திருக்கின்றது. சில காலங்களாக விளையாட்டில் தேசிய ரீதியாகவும் சாதனை படைக்கும் மாணவர்களை கொண்ட பாடசாலையாக இப்பாடசாலை விளங்குகின்றது. இவ்வருடமும் மாகாண விளையாட்டுப்போட்டியில் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது. கடந்த வருடம் மாகாணத்தில் 1500மீற்றர் ஓட்டத்தில் 2ம் இடத்தினைப்பெற்ற பா.வசந்தினி என்ற மாணவி, இந்த வருடம் 400மீற்றர், 800மீற்றர், 1500மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடத்தினை பெற்று மாகாணத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

வசந்தினி என்ற மாணவி, வயல்வெளிகளையும், காடுகளையும் ஆங்காங்கு மேடுகளில் வீடுகளையும் கொண்ட புளிச்சங்கொடி பள்ளம் என்ற கிராமத்தில் வசிக்கும் எட்டு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் ஒன்றின் கடைசிப்பிள்ளையாவாள். அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்கின்ற குடும்பத்தில் பிறந்த இவள், நாள்தோறும் 5கிலோமீற்றர் தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லுகின்றாள். சிலநேரம் வீதியால் வரும் வாகனங்களில் ஏறியும் பாடசாலையை அடைகின்றாள். தரம் 9லிலே கற்கின்ற வசந்தினிக்கு பாடசாலைக்கு வருகைதருவதற்கும், வீடுதிரும்புவதற்கும் பயன்படுத்தும் வீதி, அவளுக்கு கிடைக்கும் விளையாட்டிற்கான பயிற்சி மைதானம் என்றே கூறமுடியும். ஏன்னெனில் பாடசாலைக்கு நேரத்திற்கு சமூகம் கொடுக்க வேண்டும், யானை வருவதற்குமுன் வீட்டுக்கு செல்லவேண்டும். அதற்காக நடையோடு ஓட்டமும் இவளோடு சேர்ந்தாக இருக்கின்றது. இதுவே பயிற்சிக்கான களமாகின்றது.

பசிக்கு உணவு உண்டால் போதும், என்பது மட்டுமே சிந்தனையுள்ள மக்களாக இங்குள்ள மக்கள் வாழ்கின்றமையினால். எவ்வெவ் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் சத்துக்கள் என்ன என்று அறிந்தும் அறியாதவர்களாக இருக்கின்றமையினால், இங்குள்ள மாணவர்கள் போசாக்கு குறைவானவர்களாக இருக்கின்றமை வேதனையே. இது இம்மாணவர்களது, கல்விக்கும், விளையாட்டுப்போன்றவற்றிக்கும் தடையாக அமைந்துவிடுகின்றது.
விளையாடுவதற்கு மைதானமிருந்தும், விளையாட்டுக்கான பொருட்கள் அளவுக்கதியமாக கிடைத்தும் சாதனை படைக்க தவறுகின்ற பல மாணவர்களின் மத்தியில், விளையாட்டு மைதானமின்றியும், விளையாட்டுக்கான பொருட்கள் இன்றியும், குறிப்பாக பாதணியோ, விளையாட்டு சீருடையோ இன்றி வெறுமனே பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் தே.பவளசிங்கத்தின் ஆலோசனையையும், அறிவுரைகளையும் கேட்டு மாகாணத்தின் சாதனை வீரராங்கணையாக உயர்ந்திருக்கின்றாள்.

 


விளையாட்டு பொருட்களை வாங்குவதற்கு நிதியின்றிருந்தும், மாகாணத்தில் சாதனை படைத்திருக்கும் வசந்தினி போன்ற மாணவர்கள், தேசிய ரீதியாக சாதனை படைப்பதற்கு விளையாட்டு பயிற்சி மைதானம், விளையாட்டு பொருட்கள், போசாக்கான உணவு போன்றவற்றினை வழங்கவேண்டிய தேவையிருக்கின்றது. ஆசிரியர் வளமில்லாமல் கல்வியில் மாணவர்களுக்கு திறமைகள் இருந்தும் சாதனைகள் படைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், விளையாட்டின் ஊடாக தனது திறமையினை வெளிக்காட்டியிருக்கும் வசந்தினி போன்ற மாணவர்களை தட்டிக்கொடுக்க நம் சமூகத்தினர் முன்வரவேண்டும்.