கிராமங்களில் அரச ஊழியர்களை உருவாக்க முடியும்.

(படுவான் பாலகன்) பாடசாலைகளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தது இரு அரச ஊழியர்களை உருவாக்க முடியும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

 


பாடசாலைகளுக்கான காவலாளி, சிற்றூழியர் போன்ற நியமனங்களை அந்த கிராமங்களிலே உள்ளவர்களுக்கு வழங்குகின்ற போது, கிராமங்களில் இரு அரச ஊழியர்கள் உருவாக்கப்படுவர் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

 
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்விலே இதனைக் கூறினார்.

 
மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா ஆகிய வலயங்களிலே ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதனால் இங்குள்ள மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றவர்களாக இருக்கின்றனர். சில பாடசாலைகளுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், சிறிது காலத்திற்குள் அங்கிருந்து இடமாற்றம் பெற்று செல்கின்றனர். இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் பலதடவைகள் கூறியிருக்கின்றோம். அவர் எங்களது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஆசிரியர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவரது ஆளுமையை அவர் பயன்படுத்துவதாக தெரியவில்லை.

 
வலயக்கல்விப் பணிப்பாளர்களின் அனுமதி பெறப்படாமல், அவர்களுக்கே தெரியாமல் வலயத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் மாகாணகல்விப் பணிப்பாளரினால் இடமாற்றப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைகளும் கிழக்கு மாகாணத்திலே நடைபெறுகின்றன.
தமிழ்பிரதேசங்கள் அதிகளவில் கிராமங்களாகவே இருக்கின்றன. அக்கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு காவலாளி, சிற்றூழியர் போன்றவர்களை நியமிக்க முடியும். அவ்வாறான வெற்றிடங்களுக்கு அந்த கிராமத்திலே உள்ளவர்களை நியமிப்பதன் மூலமாக, அக்கிராமத்திலே இரு அரச உத்தியோகத்தர்களை உருவாக்க முடியும். இவ்வாறானவற்றினை கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். எனவும் மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.