பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும்.

(படுவான் பாலகன்) பிள்ளைகளின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களை செய்ய வேண்டுமென மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.
பெற்றோர்களின் தியாகங்களினாலும், சமூகத்தின் ஒத்துழைப்பினாலும்தான் நாம் இழந்த கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். எனவும் மேலும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கடந்த 2016ம் ஆண்டு தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்றது. ஆலயங்களில் திருவிழாக்கள் தொடங்கினால் மாணவர்களின் வரவு இன்னும் வீழ்ச்சியடைகின்றது. அண்மையில் கூட ஒரு பாடசாலையை தரிசித்த போது 18வீதமான மாணவர்களே பாடசாலைக்கு சமூகமளித்திருந்த கவலையான விடயம் நடந்தேறியது. மாணவர்களின் வரவுக் குறைவானது, அவர்களது கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

 

பாடசாலைகளில் குறைவான புள்ளிகளை பெறுகின்ற மாணவர்களை அவதானிக்கின்ற போது, அவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம்கொடுக்காதவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு பெற்றோர்கள்தான் காரணமாக அமைகின்றனர். மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்குதான் இருக்கின்றது.

 
நகர்புறங்களிலே உள்ள மாணவர்களை விட திறமையான மாணவர்கள், கிராமப்புறங்களிலே இருக்கின்றனர். நகர்ப்புற பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்களும் கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்களாகவே உள்ளனர். அவ்வாறு திறமை உள்ள மாணவர்களை கற்பிப்பதில் பெற்றோர்கள் அக்கறை காட்டவேண்டும். பாடசாலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதனைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இருக்கின்றது. அச்சமூகம் பாடசாலையை பாதுகாப்பதற்கு பதிலாக அழிக்க கூடாது.

 
ஏனைய சமூகங்கள் முன்னேறுகின்றது என்று கூறுகின்றோமே தவிர நாம் முன்னேறுவதற்கு முயற்சிப்பதில்லை. ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகமாக எமது வலயத்தில் இருக்கின்றன. என கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பிரதேசத்தினை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் ஏனைய இடங்களில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எமது வலயத்திற்கு வருகைதந்தால்கூட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும். நாம் எங்கு சென்றாலும் பிறந்த மண்ணை மறக்காதவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மண்ணுக்கு சேவையாற்ற திரும்பிவர வேண்டும் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.