சுமைகள் தாங்கிய வலிகள்

(படுவான் பாலகன்) அழகு தனுவின் இயக்கத்தில், ரமேஸின் தயாரிப்பில் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் சுமைகள் குறும்படம் ஞாயிற்றுக்கிழமை(16) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

 
வெளியீடு செய்யப்பட்ட சுமைகள் பல வலிகளையும் தாங்கியிருந்தமையை அறியவும், அவதானிக்கவும் முடிந்தது. சுமைகள் ஒருநாளில், ஒரு மாதங்களில் செய்து வெளியிடப்பட்டதல்ல. அரைவருடங்களுக்கு மேலாக கலைஞர்களின் அயராத உழைப்பினால் உருவாகியதாக அறியமுடிந்தது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்றாலே வறுமையில் உதயமாகியவர்களாவும், இதில் ஈடுபட்டு வறுமையை அடைந்தவர்களாகவே இருக்கின்றனர். அதுவும் தமிழர்கள் பலரிடம் பலதிறமைகள் இருந்தாலும் அவற்றினை வெளிக்காட்ட களங்களோ, ஆதரவுகளோ, உதவிகளோ அவர்களுக்கு அமைவதில்லை. அவற்றிக்காக உதவுவோரும் குறைவே என்றே கூறமுடியும். அவ்வாறு இருக்கையிலும் வெளியீடு செய்ய வேண்டும். என்ற தனுவின் அயராத முயற்சியினாலும் சிலரது ஆலோசனையின் பேரிலும், பலரின் உதவியையும் பெற்று சுமைகள் வெளிவந்தது. இரவு, பகலாக பல வலிகளை சுமையின் குழாம் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டிருந்தாக பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் மூலம் அறியமுடிந்தது.
சுமைகள், சமூகத்தில் தற்கால சூழலில் பேசுபொருளாக இருக்கின்ற பாலியல் துஸ்பிரயோகங்கள், அதற்கு அகப்படும் இளசுகள், போதைப்பாவனை இதனால் விளையும் விபரீதங்கள் போன்றவற்றினை தாங்கியிருந்தன.
பூஞ்சோலை என்பவரை கதாநாயகனாக கொண்டு, சுமைகளை வெளிக்காட்டியுள்ளனர். படத்திலே, குடிக்கு அடிமையாகிய கும்பலொன்று தண்ணீருக்காக சென்ற இளசொன்றை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றனர். அவ்வாறான செயற்பாட்டினை செய்துவிட்டு குறித்த கும்பல், தப்பித்து சென்றுவிட்டனர். இந்த விடயம் வித்தியா போன்ற இளசுகளுக்கு நடந்ததொன்றை ஞாபகப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. இப்படத்தில்  அங்கு நடந்த, அந்தவிடயம் வெளியில் வெளிக்கொணரப்படவில்லை. குறித்த செயற்பாட்டினை செய்த கும்பலை, பூங்கொடி என்ற இளசின் சகோதரன் பார்வையிட்ட போதிலும், அதனால் பெரிதான பிரச்சினைகள் எழவில்லை. மீண்டும் சிறிது காலத்தின் பின்பு, பூஞ்சோலை குளத்தினை அண்டிய பகுதியால் சென்றுகொண்டிருந்தபோது, அக்கும்பல் தானாகவே பூஞ்சோலையை அழைத்து வன்முறையை தூண்டினர். வன்முறையின் விளைவினால், குறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மரணிக்கும் சம்பவம் நடந்தேறியது. மரணத்திற்கு காரணமானவர் என்ற போர்வையில் பூஞ்சோலை சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. சிறைவாசத்தினை அனுபவித்து விட்டு, வீடு வருகின்ற போது, அவரை கூட்டி வருவதற்கோ யாரும் இருக்கவில்லை. அவ்வாறு வருகின்றபோது வழியிலே சிறுவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை அவதானிக்க வேண்டிய சூழலுக்கும் பூங்கொடி தள்ளப்படுகின்றார். அவ்வாறான சிறுவர்களுக்கு உதவி செய்யும் பாத்திரமாகவும் சிறப்பாக்கப்பட்டுள்ளான். ஆனாலும் அவனது சமூதாயம் அவனை ஏற்பதற்கும் தயாரில்லை, விமர்சிக்காமலும் விடவில்லை. எவ்வாறான நற்செயல் செய்தாலும் சமூதாயத்தால் ஒதுக்கப்படுபவனாகவும், அவனை பற்றி சிறுவர்களிடையே தவறாக கூறி மனதிலே பதிக்கின்ற சமூதாயமாகவே காட்டப்படுகின்றது. இதனால் பல வலிகளை அடுக்கடுகாய் சுமக்க வேண்டியவனாக பூஞ்சோலை உருவாக்கப்பட்டுள்ளான்.
பூஞ்சோலை, மரணத்திற்கு காரணமானவன், சிறைவாசம் அனுபவித்தவன் என சுமைகள் படத்திலே காட்டப்பட்டாலும், சமூகம் அவனுக்கான இடத்தினை கொடுப்பதற்கு மறுத்தாலும். சுமைகள் பட வெளியீட்டின் போது வெளியிடப்பட்ட படத்தினை பார்வையுற்ற போது, அங்கிருந்த பார்வையாளர்களிடத்திலே பூஞ்சோலைக்கு இழைக்கப்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அதேவேளை பூஞ்சோலை பற்றி நற்சிந்தனையே அங்குள்ளவர்களிடம் பதிந்தது. என்பதை உணர முடிந்தது.
குறும்படத்தினை தயாரித்திருந்த தனு, ஆசிரியராக இருந்து கொண்டு கவிஞானவும், நடிகனாகவும் செயற்பட்டிருப்பது பாராட்டதாக்கது. மேலும் இரண்டாவது குறும்படமாகவும் சுமைகள் வெளிவந்துள்ளன. இவரைப்போன்ற பல திறமையுள்ள இளம் கலைஞர்கள் இருக்கின்ற போதிலும், அவர்களுக்கான களம், வளம் இல்லாமையினால் வெளிக்காட்டப்படாமலே இருந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு, அவர்களுக்கான களத்தினையும், வளத்தினையும் ஏற்படுத்தி கொடுக்கும் போது, பல விடயங்களை வெளிக்கொண்டுவரமுடியும்.