கிழக்கினை மகிழ்ச்சியானதும், மேம்பட்டதுமானதொரு மாகாணமாக உருவாக்க பாடுபடுவோம்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுனராகப்பதவியேற்றுள்ள ரோஹித்த போகொல்லாகம மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையாவை ஆயரில்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்..
இன்றைய தினம் பகல் நடைபெற்ற இச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
ஜனாதிபதியின் பிரதிநிதியாக என்னை கிழக்குமாகாணத்திற்கு ஜனாதிபதியவர்கள் நியமித்திருக்கிறார். அந்த வகையில் மட்டக்களப்புக்கான எனது விஜயத்தில் ஆயர் அவர்களைச் சந்தித்தேன். இன்று பல்வேறு விடயங்களைக் குறித்தும் கலந்துரையாடினோம். எனது செற்பாடுகளில் தன்னுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று ஆயர் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்.
முக்கியமான பல்வேறு விடயங்களை மாகாணத்தில் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. இரண்டு முக்கிய பரப்புக்கள் இதிலுள்ளன. முதலாவது கடந்த கால யுத்தப்பாதிப்புக்களின் பின்னரான அபிவிருத்தி, அதன்படி மக்களின் மேம்பாட்டினைக்கருத்தில் கொண்டு அபிவிருத்திகளைச் செய்யவிருக்கிறோம். அடுத்தது சாந்தியும் சமாதானமுமான நாடு அனைத்து சமூகங்களுக்கும் தேவை.
அதே போன்று கல்வியினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நான் முழுமையான அர்ப்பணிப்புடன் கல்வியை அபிவிருத்தி செய்யவிருக்கிறேன். ஜனாதிபதி மைத்திரிபாலவின் இளைஞர்களின் அபிவிருத்தி என்ற கொள்கைக்கமைவாக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்போம்.
அதிகமாக கத்தோலிக்கப்பாடசாலைகள் கிழக்கில் உள்ளன. அவை பெருமளவான பங்களிப்பினைச் செய்து வருகின்றன. அவற்றினையும் கவனத்திலெடுப்பேன். கல்முனையிலுள்ள கார்மேல் பாத்திமா பாடசாலையின் தேவைகள் குறித்து ஆயர் அவர்கள் தெரிவித்தார். அதனை கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணனுடன் கலந்துரையாடவுள்ளேன்.
தொடரந்;து எங்களது உறவினைத் தொடர்வோம். இலங்கையின் முக்கிய பிரதேசமாக இருக்கின்ற கிழக்கினை மகிழ்ச்சியானதும், மேம்பட்டதுமானதொரு மாகாணமாக உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.