ஊர் கூடித் தேர் இழுக்கின்ற ஒரு கைங்கரியத்தைச் செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

“தமிழர்கள் வெறுமனே குறை கூறுபவர்களாக இருக்காமல் எம்மைக் கருவிகளாக்கி பயன்படுத்தக் கூடிய ஆற்றல் உடையவர்களாக மாறவேண்டும். குறை கூறிக்கொண்டு இருந்தால் முன்னேற முடியாதவர்களாகவே இருப்போம்” என, கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை திறந்துவைக்கும் நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா, நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“எமது பிள்ளைகளை எதிர்காலத்தில் சிறப்பான பிரஜைகளாக ஆக்குவது அனைவரினதும் பாரிய கடமையாகும்.

“பெற்றோர்களும் எமது பிள்ளைகளை முழுமையாக இந்த நாட்டுக்குப் பயன்படக் கூடிய பிரஜைகளாக ஆக்கிவிட வேண்டும் என்கின்ற மிகப் பெரிய அக்கறையுடன் இருக்க வேண்டும்.

“நாம் சவால் மிக்க சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் எமது மக்களிடம் உள்ளன. உடனடியாகப் பல விடயங்களைச் செய்து விட வேண்டும் என்றும் மக்கள் துடிக்கின்றார்கள். நாங்கள் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெறுமனே சொல்லிக் கொண்டிருக்காமல் எவையெல்லாம் எவ்வாறெல்லாம் செய்ய முடியும் என்பது தொடர்பிலே எங்களால் ஆன உத்திகளையெல்லாம் கையாண்டு கொண்டிருக்கின்றோம்.

“முன்பெல்லாம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது குறைகளைச் சொல்வது கூக்குரல் இடுவது ஆர்ப்பாட்டங்களைச் செய்வது என்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால், இப்போது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்றிருந்த காலம் அது. ஆனால், இப்போது அவ்வாறு அல்ல எங்களுடைய சொல்லும் அம்பலத்தில் ஏறும் என்கின்ற நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனவே, அதனை எவ்வாறு செய்விப்பது என்பதில் தான் விடயம் இருக்கின்றது.

“எம்முடன் சேர்ந்து வேலை செய்கின்றவர்கள் இந்த முப்பது வருட காலத்தில் சிறந்த தேர்ச்சியும் பயிற்சியும் அதற்கான ஆளணிகளும் கொண்டு இருக்கின்றார்கள். எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் ஆக இரண்டு வருடங்கள் தான் இவ்வாறான அனுபவத்துக்குள்ளே வந்திருக்கின்றோம். வெட்டி வா என்றால் கட்டி வருகின்ற அளவுக்குக் கூட ஆளணி எம்மிடம் கிடையாது. எம்மவர்கள் இப்போதுதான் புதிதாக ஒவ்வொரு விடயத்தையும் பழகுபவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் எமது சகோதர இனத்தைப் பொருத்தவரையில் நிலைமைகள் வேறு. அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“எம்மைக் கருவிகளாக்கி பயன்படுத்தக் கூடிய ஆற்றல் எங்களுடைய இனம் சார்ந்த உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். அவர்களிடம் உள்ள விடயங்களை எமக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்கின்ற வகையில், எங்களை இயக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

“வீணாக ஆளுக்கால் சேறு பூசுபவர்களாக இருப்போமே தவிர நமக்கு முன்னே இருக்கக் கூடிய சவாலை நாங்கள் சமாளிக்கக் கூடியவர்களாக இருக்க மாட்டோம். எனவே, நாங்கள் இப்போது ஊர் கூடித் தேர் இழுக்கின்ற ஒரு கைங்கரியத்தைச் செய்ய வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

 

tamilmirror