காணாமல் போன 11 தமிழ் இளைஞர்கள்; கைதான கொமாண்டருக்கு விளக்கமறியல்

முன்னாள் கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, ஜூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று (14) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவருக்கு விளக்கமறியல் விதித்தார்.
சந்தேகநபர், சுகவீனமுற்ற நிலையில், வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் (12) இரவு கைது செய்யப்பட்டு, இன்று (13) வைத்தியசாலை அம்பியுலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக, அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பொலிசார் நீதிமன்றில் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, வெலிசறை வைத்தியசாலைக்குச் சென்று, அவர் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வத்தளை நீதவானுக்கு கோட்டை நீதவான் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து, வத்தளை நீதவான் நேற்றைய தினம் வெலிசறை கடற்படை மருத்துவமனைக்கு சென்றதோடு, இன்றைய தினம் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.
கடந்த 2008 காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த கொமாண்டர் சுமித் ரணசிங்க, கடற்படை உத்தியோகத்தர்களான லக்‌ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக இஹலகெதர தர்மதாஸ, ராஜபக்‌ஷ கித்திசிறி ஆகிய ஐவருக்கு ஏற்கனவே விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளதோடு, முதலாவது சந்தேகநபரான சுமித் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 ஓகஸ்ட் 08 – 2008 செப்டெம்பர் 17 வரையான காலப்பகுதியில், 11 தமிழ் பேசும் இளைஞர்கள் காணாமல் ஆக்கபட்டுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் வெள்ளவத்தை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில்,
1. கஸ்தூரிஆரச்சிகே ஜோன் ரீட்
2. ரஜீவ் நாகநாதன்
3. பிரதீப் விஷ்வநாதன்
4. திககேஸ்வரன் ராமலிங்கம்
5. மொஹமட் சாஜித்
6. ஜமால்தீன் டிலான்
7. அமனன் லியோன்
8. ரொஷான் லியோன்
9. அந்தோனி கஸ்தூரியாரச்சி
10. தியாகராஜா ஜெகன்
11. மொஹமட் அலி அன்வர்
ஆகிய 11 பேர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.