பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம்

தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களாக ஓர் ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காமல், அரசியலமைப்பு சபை நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தும் எண்ணத்துடன், ஓர் அரசியல் மூலோபாயத்தை வகுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அவசியமாகவும் அவசரமாகவும் ஏற்பட்டிருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழரசுக் கட்சியும் சாத்தியமான விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த வேண்டும் எனவும், அந்த பேச்சுவார்த்தையில் காத்திரமான சில முடிவுகள் இரு கட்சிகளாலும் எட்டப்படுமிடத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு அங்கத்துவக் கட்சிகளும் கலந்து பேசி இந்த முயற்சிகளை முன்னோக்கி நகர்த்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது