பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி

பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் 51 ஆசிரியர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் அண்மையில் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது. கழுவாஞ்சிக்குடியில் செயற்பட்டுவரும் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சி.குருபரன் அவர்களின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலை வேளையில் மாணவரிடையே ஏற்படும் நோய், விபத்து முதலானவற்றை எவ்வாறு கையாளுவது என்ற விடயங்கள் செய்முறை மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தேர்ச்சி பெற்ற முதலுதவிப் பயிற்றுனர் குழுவினரால் விளக்கப்பட்டது. பயிற்சிக் குழுவினருக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமை தாங்கினார்.

மாணவரிடையே மயக்கம், உணர்விழப்பு, காயங்கள்;, என்பு முறிவுகள், மூச்சுத் திணறல் முதலான நோய் அல்லது விபத்துக்கள் ஏற்படுகின்ற வேளையில் பதட்டப்படாமல் நிதானத்துடனும் தைரியத்துடனும் வேகமாக செயற்பட்டு முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தல் என்பன பாடப்பரப்பில் அடங்கியிருந்தன.

பயிற்சியின் இறுதியில் நடந்த பயிற்சி மதிப்பீட்டின்போது முதலுதவிப் பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை தங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இந்ததெனவும் பாடசாலை ஆசிரியர்கள் அனைவருமே முதலுதவி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தங்களது கருத்தினை பதிவு செய்து கொண்டனர்.