வணக்கஸ்தலங்கள் அமைப்பதாயின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் அனுமதி வேண்டும்.

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குள் எந்ததொரு மதத்தினதும் வணக்கஸ்தலங்கள் புதிதாக அமைப்பதாகவிருந்தால் அதற்கான அனுமதி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பெறுதல் வேண்டுமென மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் தலைமையில், செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்ற போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எமது மாவட்டத்திலே பல கோயில்கள் அமைந்துள்ளன. அக்கோயில்கள் எல்லாம் சமூகசேவைகளை செய்வதில்லை. மக்களிடம் வரியினை அறவிட்டு சடங்கினையும், திருவிழாக்களையும் நடாத்துகின்றனர். இதற்காக பலரூபாய் பணம் குறிப்பாக வெடில் போன்ற ஆடம்பரங்களுக்கு செலவு செய்யகின்றனர்.

அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடாத்துகின்ற மக்களும் வரியினை ஆலயங்களுக்கு செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு குடும்பத்திடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களுக்காக வரிகள் அறவீடு செய்யப்படுகின்றன. இதனாலும் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதன் போது குறிப்பிட்டார்.

வணக்கஸ்தலங்கள் மக்களுக்கு சுமையாக அமைய கூடாது. இருக்கின்ற கோயில்களை மாத்திரம் நிர்வகித்தால் போதும் இனிமேலும் பிரதேசத்தில் புதிய ஆலயங்கள் அமைக்க தேவையில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய பிரதேசத்தில் வணக்கஸ்தலங்கள் புதிதாக அமைப்பதாக இருந்தால் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.