சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்ய தற்காலிக பொலிஸ் அரண்.

(படுவான் பாலகன்)  சட்டவிரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய தற்காலிக பொலிஸ் அரண்களை அமைக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.
பொலிஸ் அரண்களை அமைப்பதன் மூலமே இரவு நேரங்களில் மண் அகழ்வில் ஈடுபடுவர்களை கைது செய்ய முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோத மண் அகழ்வில் பலர் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. அவ்வாறு அகழப்படும் மண் பிரதேசத்திற்குட்பட்ட ஒரு சில பிரதான வீதிகளினூடாக கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறான வீதிகளில் தற்காலிக பொலிஸ் அரண்களை அமைப்பதன் மூலமாக மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யக்கூடியதாகவிருக்கும்.
சட்டவிரோத மண் அகழ்வின் ஊடாக பிரதேசத்தில் உள்ள மண் வளம் சூரையாடப்படுகின்றது. பிரதேசத்தில் உள்ளவர்கள் மண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் இருக்கின்றது. அதேவேளை உழவு இயந்திரத்தின் மூலம் 2500ரூபாய்க்கு மண்ணை பெற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் 7000ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது. அதேபோன்று மூன்று கியூப் மண் 10000ரூபாய்க்கு பெற்றவர்கள் இன்று 20000ரூபாய்க்கு பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் உழைத்து வாழுகின்ற மக்கள் கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மண்ணேற்றுவதற்கு அனுமதி வழங்காமல் உள்ள நிலையிலும், இப்பிரதேசத்தில் மண்ணேற்றுகின்றனர். என்றார்.
பிரதேசத்தில் தற்காலிக காவலரண்களை அமைப்பதென இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எவ்விடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் பொலிஸ் மற்றும் பிரதேசசெயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து தீர்மானிக்குமாறும் கூறப்பட்டது.