பாடசாலை மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

(படுவான் பாலகன்)  பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கின் மூன்றாம் கட்ட நிகழ்வு முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(12) புதன்கிழமை இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், சமுர்த்தி திணைக்களமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனைத் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முன்னெடுத்து வருகி;ன்றனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சமூர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.சி.அகிலேஸ்வரன்; ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட சுமார் 520 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாணவர்களாகிய நாங்கள் “எமது வாழ்நாளில் போதைப் பொருட்களை எக்காரணம் கொண்டும் நுகர மாட்டோம்” என பதாதையில் மாணவர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். மேலும் கையொப்பமும் இட்டனர். கையொப்பமிட்ட பதாதை பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், குடும்ப பிணக்குகள், வறுமைக்கான காரணங்கள், மாணவர் கல்விப் பாதிப்பு போன்ற விடயங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.