பொறுப்புக் கூறக்கூடிய அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

(படுவான் பாலகன்) பொறுப்புக்கூறக்கூடிய, தீர்மானங்களை எடுக்க கூடிய அரச அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில், தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை அக்கூட்டத்திலே தீர்க்க வேண்டும். அவற்றினை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. என்று கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அனைத்து திணைக்களங்களினதும் பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரிகள் கலந்து கொண்டால்தான் அவ்விடத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்.
சில திணைக்களங்களில் இருந்து, பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரிகளுக்கு பதிலாக ஏனைய உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பொறுப்புக்கூடிய பதிலை வழங்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலையும் காணப்படுகின்றது. இவர்களால் இங்கு நடைபெறும் விடயங்களை அவர்களுக்கு கொண்டு செல்ல முடிகின்றதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லமுடியாமல் தடுமாறும் நிலையேற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டார்.
மாகாணசபை உறுப்பினரின் வேண்கோளுக்கிணங்க பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.