நெல்உற்பத்திக்காக அதிகளவு செலவு செய்கின்றனர்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானவர்கள் நெல் உற்பத்தி தொழிலிலே ஈடுபடுகின்றனர். அதற்காக அதிகளவு பணத்தினை விவசாயிகள் செலவு செய்கின்றனர். இதனால் நெல் செய்கையின் மூலம் இலாபமூட்ட முடியாதவர்களாக விவசாயிகள் இருக்கின்றனர். இதற்கு அடிக்கடி காலநிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாகின்றன. இவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய தருணத்தில் விவசாயிகள் நின்றுகொண்டிருக்கின்றனர். என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இரா.கோகுலதாசன் குறிப்பிட்டார்.
கொக்கட்டிச்சோலை கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட பட்டிப்பளையில் நேற்று(10) திங்கட்கிழமை இடம்பெற்ற நெல் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பிரதி பணிப்பாளர் அங்கு உரையாற்றுகையில்,
இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய செய்கையை மேற்கொள்வதன் மூலம், அதிகளவான விளைச்சலை பெற முடியும். அதேவேளை நெற்செய்கைக்கான செலவு அதிகமாகவுள்ளது. அவற்றினையும் குறைக்க முடியும். வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.
இலங்கையில் அண்ணளவாக ஏக்கருக்கு 100தொடக்கம் 120பூசல் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. சீனாவிலே ஒரு ஏக்கருக்கு 300பூசல் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்களையே சீனாவில் பயன்படுத்துகின்றனர் இதனால் அதிக விளைச்சலினை அங்குள்ள விவசாயிகள் பெறுகின்றனர்.
காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய, புதிய இயந்திரங்கள் வருகின்ற போது அவற்றினை பெற்று பயன்படுத்தக்கூடிய விவசாயிகளாக அனைவரும் உருவாக வேண்டும். விவசாய திணைக்களங்களின் ஊடாக பல்வேறு உதவிகள் மானியமுறையில் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென கமநலகேந்திர நிலையங்களில் இயந்திரங்கள் உள்ளன. அவற்றினை முன்னுரிமை அடிப்படையில் பெற்று இயந்திரங்களை பயன்படுத்த முடியும்.
சிவப்பு நெல்லிற்கான கேள்விகள் அதிகரித்து செல்வதன் விளைவாக சிவப்பு நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக சிவப்பு சம்பா நெல்லினையும் அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறான விதைநெற்களையும் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
ஊடகங்களும்; இவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி பிரபல்யபடுத்த வேண்டும். விவசாய திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான நன்மை, தீமைகளையும் வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சிறந்த கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படும் என்றார்.