கொக்கட்டிச்சோலை பகுதியில் உடைக்கப்பட்ட தாமரைபூ மீண்டும் அமைக்கப்பட வேண்டும்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கற்சேனை பிரதான சந்தியின் நடுவில் தாமரைப்பூ அமைக்கப்பட வேண்டுமென மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இணைத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் இன்று(11) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம், மா.நடராசா ஆகியோரும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அம்பிளாந்துறை, கற்சேனை, வெல்லாவெளி, வால்கட்டு ஆகிய இடங்களுக்கு செல்லுகின்ற நாற்சந்தியின் நடுவில் தாமரைப்பூ அமைக்கப்பட்டிருந்தது. இதனை அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் உடைத்திருந்தனர்.
அமைக்கப்பட்டு நீண்டகாலமாக சந்தியில் இருந்த நிலையில், வீதி அபிவிருத்திக்காக இதனை அகற்றுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியிருந்தது. குறித்த தாமரைப்பூவினை அகற்ற வேண்டாம். என மக்கள் எதிர்பினை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் சந்தியில் இருந்து தாமரைப் பூ அகற்றப்பட்டது.
குறித்த தாமரைப்பூவினை அங்குள்ள மக்கள் தமது ஞாபகசின்னமாக பராமரித்துவந்துள்ளனர். அதேவேளை குறித்த சந்தியினை தாமரைப்பூ சந்தியெனவும் இற்றைவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில், அதேவடிவத்தில் தாமரைப்பூ அமைக்கப்பட வேண்டுமென அப்பிரதேசத்து மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் குறிப்பிட்டதற்கமைய அவ்விடத்தில் பழமைபோன்றதான தாமரைப்பூவினை அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாமரைப்பூவினை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரே அமைக்க வேண்டுமெனவும் இதன் போது கூறப்பட்டது.