கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை .ஆளுநர்

நல்லிணக்கம் மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு, கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என, அம்மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் தெளிவாகத் தெரிந்துகொண்டுள்ளேன். கல்வியில் பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்கள் இம்மாகாணத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.

இணக்கமான, நட்புணர்வு ரீதியில் செயற்பட்டு கிழக்கு மாகாணத்தையும் நாட்டையும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வது இன்றியமையாத காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது” என ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்..