தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. மாவை சேனாதிராசா

இன்று தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. எங்களது மக்களுடைய பலம், ஜனநாயகப் பலம், சர்வதேச ரீதியான தீர்மானங்களும், அழுத்தங்களும் எங்களுக்கு மிக்க பலமாக அமைந்துள்ளது. அப்பலத்தினூடாகவே கொடூமரமிக்க ஆட்சியை மாற்றி அமைத்துக் காட்டியுள்ளோம்..இவ்வாறு கூறினார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா .ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50வருட கால ஊடகப் பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ‘பொன்விழாக்காணும் சலீம்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் (09) இரவு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தந்தை செல்வாயின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு .தமிழை மறந்து போன நிலையில் கொழும்புத் தமிழர்கள் இருந்த காலத்திலும்கூட, சிங்கள தேசத்திலே வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது வீட்டு மொழியாக தமிழை வளர்ப்பதில் மிகப்பெரிய ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களுக்கு ஒரு தீர்வும், விடிவும் கிடைக்கின்ற போது அது முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான விடுதலையும், விடிவுமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாங்கள் குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

பூரணமாக அதிகாரப் பகிர்வு வழங்கப்படல் வேண்டுமென அனைவராலும் முன்வைக்கப்பட்டு அது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது அரசியலமைப்பு மாற்றத்திற்கான நகர்வை முன்னெடுக்கும் போது அது முக்கிய பிரச்சினையாக மாறுகின்றது.

அதிகாரம் பூரணமாக பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் அனைவரும் எங்களிடமும் பாராளுமன்ற வழிகாட்டல் குழுவிடமும் தெரிவித்துள்ளனர்.

சமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்குமாறு பௌத்த துறவிகள் வற்புறுத்துகின்றனர். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவது, சட்டம் ஒழுங்கு, காணிஅதிகாரம். நிதி அதிகாரங்கள் முழுமையாக வடக்கு, கிழக்குக்கு பகிரப்படும் பொழுது வடக்கும்,கிழக்கும் இணைந்த நிலையிலா இந்த அதிகாரம் வழங்கப்படுகிறதென கேள்வி எழுப்பப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையுள்ளதென்பதை நாங்கள் பல முறை தெரிவித்துள்ளோம்.

இந்த நாட்டினுடைய நீதி, நேர்மைய சீர் குலைத்த பொறுப்பை காவியுடை தரித்த சிலர் சுமந்துள்ளனர். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும். இனங்களுக்கடையிலுள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயற்படும் போது அதற்கும் தடையேற்படுகின்றது. இன்று தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. எங்களது மக்களுடைய பலம், ஜனநாயகப் பலம், சர்வதேச ரீதியான தீர்மானங்களும், அழுத்தங்களும் எங்களுக்கு மிக்க பலமாக அமைந்துள்ளது. அப்பலத்தினூடாகவே கொடூமரமிக்க ஆட்சியை மாற்றி அமைத்துக் காட்டியுள்ளோம்.மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்றுவதிலும்,சமூகப்பணிசெய்வதிலும் முன்னின்று உழைத்த ஊடகவியலாளர்களை நாம் மறந்துவிட முடியாது .அந்த வகையில் ஊடகவியலாளர் ஏ.எல். எம்.சலீமின் பணிகளையும் நாம் பாராட்டவேண்டும் என்றார்.