பிரதேச செயலாளர் இடமாற்றத்தில் எனக்கு சம்பந்தமில்லை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் மன உளைச்சலைத் தருகின்றன. – மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களை அந்த நேரங்களில் சுட்டிக்காட்டாமல் மட்டக்களப்பு நகரில் கூடி சுட்டிக்காட்டியிருப்பது எங்களுக்கு மன உளைச்சலை தருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்..

மாவட்டச் செயலகத்தில் திங்கட்பிழமை பகல் (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக்  கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் தொடர்பாக  தெளிவுபடுத்தலை ஏற்படுத்த வேண்டிய தேவை இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபராகிய எனக்கும் என்னோடு சேர்ந்த அதிகாரிகளுக்கும் இருக்கின்றது.

அரசாங்க அதிபர் என்பது அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படுகின்ற அரச கடமைகளை ஆற்றுவதற்காக நியமிக்கப்படுகின்ற ஒரு அதிகாரியாவார்.

எனவே அரசங்கம் எனக்கு கையளித்த கடமைகளை மட்டும் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட எனது அதிகார வரம்புக்குள் மட்டும்தான் என்னால் செயற்படமுடியும். வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம் வந்த நாளில் இருந்து நான் தெரிவித்து வருகின்றேன்.

இது தொடர்பாக அரச அதிபரான என்னோடு உரிய பிரதேச செயலாளர்களும் கலந்துரையாடவில்லை. இது நிர்வாக நடவடிக்கையை அரசியல் மயப்படுத்துகின்ற செயல்பாடாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் அவருடன் சேர்ந்த குழுவினரும் ஊழல்வாதிகள் என இன்று அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன் அவர்களின் பேச்சுக்களிலும் கூறியுள்ளார்கள்.  2010ஆம் ஆண்டு 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள நிவாரணத்தில் ஊழல் நடந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் யார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தாரோ அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை.

இந்த மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் கலந்துகொள்கின்ற அனைவரினாலும் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற கூட்டங்களில் அவற்றினை மீளாய்வு செய்யப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் சீர்தூக்கிப்பார்க்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அவை சீர்தூக்கிப்பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையாகும்.

இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை அந்த நேரங்களில் சுட்டிக்காட்டாமல் மட்டக்களப்பு நகரில் கூடி சுட்டிக்காட்டியிருப்பது எங்களுக்கு மன உளைச்சலை தருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு வருகின்ற அத்தனை நிதியொதுக்கீடுகளும் அதனுடைய செயற்பாடுகளும் பிரதேச செயலகங்களினால் தான் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே மாவட்ட செயலகத்தினால் இந்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்கான நிதியொதுக்கீடுகள் நேரடியாக பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகங்களினால் மட்டுமே அவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

காணி அதிகாரம் 13ஆவது திருத்த சட்டமூலத்திலே பிரதேச செயலாளர்களுக்கும் மாகாண சபைக்கும் கையளிக்கப்பட்ட அதிகாரமாகும். இதில் அரசாங்க அதிபருக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்பதை நான் பல தடவை கூறியிருக்கின்றேன்.

இங்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி மற்றும் கணக்காளர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் இருக்கின்றார்கள்.  ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுபவர்களும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றவர்களும் தாங்கள் கூறுகின்ற குற்றச் சாட்டுக்களை உரிய வகையில் சமர்ப்பித்து அதில் என்ன நடந்துள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

ஊடகங்களில் மாத்திரம் வருகின்ற செய்திகளை வைத்துக்கொண்டு தனிமனித சுதந்திரத்தினையும் கௌரவத்தையும் அழிப்பதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபடவது இந்த சமூகத்திற்கு நல்லதல்ல என நினைக்கின்றேன்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் மாட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.இன்பராஜன், மற்றும் கணக்காளர் நேசராசா  மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.