பட்டிப்பளையில் புதிய நெல் அறிமுகமும், இயந்திரமூலம் நட்ட நெல் அறுவடையும்.

(படுவான் பாலகன்)  கொக்கட்டிச்சோலை கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட பட்டிப்பளையில் நெல் அறுவடை மற்றும் புதிய நெல் அறிமுக நிகழ்வு இன்று(10) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

பட்டிப்பளை பிரதேசத்தில் முதன்முறையாக விதைநடும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி இரு இடங்களில் இவ்வருடம் நெற்கள் பயிரிடப்பட்டன. மேலும் புதிதாக இவ்வருடம் சிவப்பு சம்பா விதை நெல்லும் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட சிவப்பு சம்பா விதை நெல், 2கிலோ கிராம் ஒரு விவசாயினால் பட்டிப்பளையில் இவ்வருடம் விதைக்கப்பட்டது. அவற்றிலிருந்து 160கிலோக்கிராமிற்கு மேற்பட்ட நெற்கள் பெறப்பட்டுள்ளன. அந்நெல்லினம் இரண்டரை மாத வயதுடையது. இவற்றிற்கான நோய்த்தாக்கமும் குறைவாக உள்ளதனை அவதானிக்க முடிந்தது. இயந்திரங்கள் மூலமாக நட்டதினால் களைகள் குறைவாகவும், செலவினை குறைக்க கூடியதாகவும் இருந்தது என கொக்கட்டிச்சோலை பிரதேச விவசாய போதனாசிரியர் ரி.மாதவன் இதன்போது தெரிவித்தார். அந்நெல்லினையும் விவசாயிகளுக்கு காண்பித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி மாகாணப்பணிப்பாளர் இரா.கரிகரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இரா.கோகுலதாசன் மற்றும் விவாசய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.