மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் இவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச் சென்றடையும் என சங்கத்தின் தலைவர் சி.விஜயசிங்கம் (அப்பாஜி) தெரிவித்தார்..
வருடாவருடம் நடைபெறும் இவ் கதிர்காம யாத்திரையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள முடியும். மேலதிகதொடர்புகளுக்கு: தொலைபேசி இலக்கம் 0758922917 என்றும் அவர் தெரிவித்தார்.
பாண்டிய நாட்டின் தென் கீழ்த்திசையில் திருச்செந்தூரும் ஈழநாட்டில் தென்சீர்த்திசையில்கதிர்காமமும் அமைந்துள்ளது. பௌத்த மக்களையும் இந்துக்களையும் கவர்ந்திழுக்கும் அருள்மிகு திருத்தலமாக கதிர்காமம் விளங்குகின்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளுடையதாய் புராண வரலாற்றுச் சிறப்புக்கள் கொண்டமைந்தது. வெளிநாட்டவரையும் திருவருளால் தன்னகத்தேஈர்ந்து விளங்கும் திருத்தலம் கதிர்காமமாகும். இத்தலம் இலங்கையின் தென்பாகத்தே ஊவா மாகாணம் தெற்கே முடிவடையும் எல்லையில் தியனகம என்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமம் பெரும்பாலும் காடடர்ந்ததாகவே காட்சி அளிக்கின்றது. தரையானது அம்பாந்தோட்டைப் பகுதியில் கடல்சார்ந்த நெய்தல் நில சம தரையாகவும் மேலே செல்லச் செல்ல காடு சார்ந்த முல்லை நிலமாகவும் வடக்கே செல்லமலை சார்ந்த குறுஞ்சி நிலமாகவும் காட்சியளிக்கிறது.
குறிஞ்சி நிலப்பாங்கும் குமரவேள் உரைக்குன்றும் சேயோன் மேயவரை உலகமும் என பழந்தமிழ் நூலாம் தொல்காப்பியம்கூறும் இலக்கணத்திற்கமைந்து விளங்குவது கதிர்காமத் தலமாகும்.
கதிர்காமம் என்பதன் பொருளைப் பார்ப்போமாயின் கதிர் என்பது ஒளி அதாவது முருகக் கடவுள் ஒளி வடிவில் காமமாகிய இருப்பிடத்தில் குடி கொண்டுள்ளார் எனப் பொருள்படும். அதாவது கதிர் என்பது ஒளியெனவும் காமம் என்பது அன்பெனவும் கொண்டு கதிர்காமம் எனப் பொருள்படும். இத்தகைய இடம் தமிழரால் சிறப்பாக இந்துக்களால் வந்தனை செய்யப்படும் இடமாக திகழ்கின்றது.
இந்துப் புனிதத்தலம் நோக்கி இலங்கையில் பல்வேறு இடங்களிலும் இருந்தும் பாதயாத்திரை மேற்கொள்வது மரபாக அன்று தொட்டு இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வகையில் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் யாதயாத்திரிகர் சங்கம் முதன்மை பெறுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் சற்குருநாதர் சடையப்ப சுவாமிகள் ஆவார். இன்று இவர் சமாதி திராய்மடு என்னுமிடத்தில் உண்டு. இவை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்திற்கு வடக்கே சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கடலலை ஓசையும் களங்கமற்றதான காற்றும் வீசும் பனை வளம் பிரம்பு வளம் நிறைந்த வன விலங்குகள் நிறைந்த காடு இங்கேயுள்ள வளத்தைக் கொண்டுகூடை பின்னுதல் அலம்பில் வெட்டிக் கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்துகொண்டு அதில் வரும் வருவாயில் தனது அன்றாட வாழ்வை நடாத்திக் கொண்டு சிறு ஓலைக்குடிசையுள் முருகப்பெருமானை பூஜித்து அங்கே வருபவர்களுக்கு நீர் ஆகாரம் கொடுத்து வந்தார். இவர்தான் இன்றைய முருகன் ஆலயத்தின் அருகில் சமாதியடைந்திருக்கும் சற்குருநாதர் சடையப் பசுவாமிகள்ஆவார். இவர் தாடி, நீண்ட 14 அடி உடைய சடை, கோவணம், தோளில் ஒர் வஸ்திரத் துண்டுடன் காட்சியளிப்பார்.
சாதாரண மனிதர் போல் வாழ்ந்து வந்த இவர் பரிபூரணமான முருக பக்தராய் திகழ்ந்தார். பிறப்பிடம் மட்டிக்கழியாய் இருந்தும் அமைதி தேடி திராய்மடு காட்டினுள் குடிசையமைத்து வாழலானார். தான் யாரிடமும் கையேந்தாமல் சுயமாக உழைத்து மற்றவர்களுக்கும்ஈர்ந்துவந்தார். தனக்கென எதுவும் தேடவோ சேமிக்கவோயின்றி ஏழ்மையுடனும் இரக்க சிந்தனையுடனும் வாழ்ந்த இவரை சமூகம் இறையடியாராய் கண்டது. நாளுக்ளுநாள் இவர் செயற்பாடுகள் இறை சிந்தனையில் மேன்மையடைதல் கண்டு அடியார் கூட்டம் இவர் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டது.
ஒரு நாள் அது 1963 ஆடிமாதம் சாய்பொழுது தனது கொட்டிலின் முற்றத்து மணலில் சுவாரசியமாக சடையப்பர் அமர்ந்து கொண்டிருந்தார். அங்கே அரோகராசத்தத்துடன் கதிர்காம அடியார்கள் செல்வதைப்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அப்பாஜி என்று இன்று கூறும் விஐயசிங்கம் அவர்கள் சிறுவனாய் குடிசையை அண்மித்த தூரம் நின்று இரவில் தீனா மூட்ட விறகெடுத்துக் கொண்டிருந்தார். திடீர் என சடையப்பர் விஐயப்பா என உரத்த குரலில் சத்தமிட்டார். விபரம் தெரியாது சிறுவன் விழித்து நின்றான் இங்கே வா நாளை நீயும் நமது வேல் ஏந்தியவனாய் கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை செல்கிறாய் எனக் கட்டளையிட்டார். அந்த குரு கட்டளைக்கிணங்க இன்னும் சுமார் 53 வருடங்களாக சோராது யாத்திரையை முன்னெடுத்து வருகிறார். இன்று இவ்யாத்திரையில் சுமார் 1500 பேர்வரை இணைந்துள்ளார்கள். இவ்வளர்ச்சிக்கான காரணம். கண்டிப்பான தலைமைத்துவம் ஆகும். இதனால் பலன் பெற்றோர் பரீட்சையில் சித்தி, வியாபாரம் மற்றும் தொழில் விருத்தி ஆகியன கிடைத்திருக்கிறது.
இவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச் சென்றடையும்.

மேலதிகதொடர்புகளுக்கு:
தொலைபேசி இலக்கம் 0758922917.
இணையத்தளம்: https://www.mpfootpilgrimasoctm.weebly.com
முகநூல் : பாத யாத்திரிகர் சங்கம் திராய்மடு மட்டக்களப்பு.