மகா சங்கத்தினரை சம்பந்தன் சந்திக்க வேண்டும்

அரசியலமைப்பு தயாரிப்புப் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மகா சங்கத்தினரை சந்திக்க வேண்டுமென பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்..

மகா சங்கத்தினருக்கு அரசியலமைப்பு தயாரிப்பு பற்றி தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம். எனவே கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மகா சங்கத்தினரைச் சந்திக்க வேண்டும் என தான் கோரியிருப்பதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதுபற்றித் தெரிவித்தார். தமிழ் மக்கள் தங்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பிரதான நிக்காயக்கள் கூட்டாக ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களையோ செய்யக்கூடாது எனக் கூறியிருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தாமாக முன்வந்து தேசிய அரசாங்கமாக ஆட்சியில் அமர்ந்து முற்போக்கு சிந்தனையுடன் இச்செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதற்கே ஆணை வழங்கியிருந்தனர். அவ்வாறிருக்கையில் தற்போது அதிவணக்கத்துக்குரிய சமயத்தலைவர்கள் இவ்வாறான அறிவிப்பை விடுத்திருப்பது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சமயத்தலைவர்கள் இந்த நாட்டின் அனைத்துப்பிரஜைகளுக்கும் பொதுவானவர்கள். அவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாடுகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக தற்போது எழுந்துள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆகவே விரைவில் எதிர்க்கட்சித்தலைவர் எமது கோரிக்கைக்கு அமைவாக மகாசங்கத்தினருடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

TK