கல்வி அமைச்சர் பல விடயங்களை வெளியில் சொல்ல முடியாமல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்


பந்தியில் இருப்பவனுக்கு ஒரு அகப்பையை வைத்து விட்டு நம்மவர் என்பதற்காக அள்ளி அள்ளி மறுபக்கம் வைத்தது தான் இதுவரையில் இங்கு நடைபெற்றன. தற்போது நாங்கள் அகப்பையை பிடிக்க வருகின்ற நேரத்தில் பானைக்குள் எதுவுமற்ற நிலைமையே இருக்கின்றது. எனவே எமது வளங்கள் பல்வேறு விதமாக கல்வித் திணைக்களத்தினாலே சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது கல்வி அமைச்சர் அவர்களும் பல விடயங்களை வெளியில் சொல்ல முடியாமல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணையடி கிராமத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்..

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
கல்விப் புலத்தில் இடம்பெறுகின்ற இடமாற்றம் என்கின்ற விடயங்கள் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்ற அல்லது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகளுக்கு எல்லாம் அப்பால் அந்த விதிகளையெல்லாம் புறந்தள்ளித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த வலயங்களுக்கு வளங்களைக் கொடுக்கின்ற விடயத்தில் முன்பிருந்த அந்த இறுக்க நிலைமைகள் இன்னும் தொடர்ச்சியாக மழை பெய்த பின்பும் தூறல் விடுவதில்லை என்பது போல் இருந்து கொண்டே இருக்கின்றன.

ஆசிரியர் நியமனங்கள் ஒழுங்காகக் கிடைக்கும் ஆனால் நியமனத்தின் பின்பு ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றம் என்று சொல்லி சென்று விடுவார்கள் ஆனால் அவர்களுக்கான சம்பளங்கள் எல்லாம் அவர்கள் நியமனம் பெற்ற பாடசாலைகளிலேயே இருக்கும் அவர்கள் அங்கு கடைமை புரிவதில்லை. இருந்தும் இல்லாமல் இருப்பார்கள். இது மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகளின் வித்துவம்.

கிழக்கு மாகாண கல்வியைப் பொருத்த மட்டில் ஒரு செயற்கையான நிலைமையில் எல்லாவற்றையும் கையாளுகின்ற ஒரு செயற்பாடு இங்கு இடம்பெறுகின்றது. பாடசாலை மாணவர்களின் சித்தியடைந்த விகிதாசாரத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக கல்வி அளித்தல் தொடர்பாக இருக்கின்ற அடிப்படை விதியாகிய எல்லா மாணவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் அதிலும் மெல்லக் கற்போருக்கு இன்னும் கூடுதலான கவனத்துடன் கல்வி வழங்க வேண்டும் என்கின்ற விடயங்களையெல்லாம் புறந்தள்ளி திறமையான மாணவர்களை மட்டும் தனியாக எடுத்து மாணவர் தொகையைக் குறைத்து பரீட்சைப் பெறுபேற்றில் முதன்மை பெற வேண்டும் என்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவை இயற்கையான விடயங்கள் அல்ல.

இந்த செயற்கையான விடயங்களால் அங்கு பாதிக்கப்படப் போகின்ற அந்த மாணவர்கள் பற்றி அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மிக உயர்ந்த கல்வியாளர்கள் கூடக் கவலைப்படவில்லை. ஆனால் இவ்வாறான செயற்கை விகிதாசாரத்தைக் காட்டுவதில் அவர்கள் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் புள்ளி விபரங்கள் ஒவ்வொரு இடத்திற்கு வித்தியாசமான முறையில் காட்டப்படுகின்றது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் கிழக்கு மாகாணத்தில் தேவையான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஏதோவொரு விதத்திலே  அது இல்லாது காட்டப்படுகின்றது. இவ்வாறு பல விதமான தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றது. அது என்ன தந்திரோபாயம் என்று தெரியவில்லை. இவ்வாறு செயற்படுகின்றது எமது கல்வித் திணைக்களம்.

பலருக்கு கேள்வி இருக்கின்றது கல்வி அமைச்சர் எம்முடையவராகத் தானே இருக்கின்றார் அவருக்கு ஏன் இதையெல்லாம் செய்ய முடியாது என்று. அரசியலிலே பல விடயங்களுக்கு நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. வட மாகாணத்தில் இடம்பெற்றதைப் போல் செய்ய முடியாது. ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கேற்ற விதத்திலான அணுகுமுறைகளைக் கையாண்டு மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒரு கஷ்டமான நிர்வாகத்திற்குள்ளே இருக்கின்றோம் என்றாலும் நாங்கள் இருக்கும் வரையில் கல்விப் புலத்தின் செயற்பாடுகளை நாங்கள் இலகுபடுத்துவோம்.
எமது காணி தொடர்பான விடயங்களிலே பல விதத்தில் நீதி செயற்படுகின்றது. காணி என்பது தொடர்பில் முக்கிய சட்டக்கருத்து என்னவென்றால் உடமையில் இருப்பனுக்குத் தான் காணி சொந்தம். ஆனால் எங்கோ இருந்து கொண்டு உறுதி எழுதி வைத்துக் கொண்டு காணி பிடிக்கின்றர்கள் அதற்கேற்ற விதத்திலே நீதியும் செயற்படுகின்றது. குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மகவேற்புச் செய்ய முடியாது அதுதான் சட்டம் ஆனால் அப்படியானவர்களே மகவேற்புச் செய்யும் முகமாகத் தீர்ப்பளிக்கப்படுகின்றது. எனவே நீதி என்பது நீதிபதியைப் பொருத்ததாகவே இருக்கின்றது.
அரசாங்கத்தினால் பல நெருக்குவாரங்கள் வந்த போது எமது இனம் நின்று பிடித்ததற்குக் காரணம் எம்மவர்கள் எல்லாம் சட்டத்துறையிலே மேன்மை பெற்றிருந்ததன் காரணமாகத் தான்
எனவே எமது சிறுவர்கள் சட்டம் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அந்தத் துறையை நாங்கள் விடக் கூடாது எமது முன்பிருந்த பலம் எல்லாம் அதுதான். அரசாங்கத்தினால் பல நெருக்குவாரங்கள் வந்த போது எமது இனம் நின்று பிடித்ததற்குக் காரணம் எம்மவர்கள் எல்லாம் சட்டத்துறையிலே மேன்மை பெற்றிருந்ததன் காரணமாகத் தான்.
இந்தக் கிராமம் எப்போதும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான கிராமம் இதனால் முன்பிருந்த நிர்வாகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் இக்கிராமம் தமக்கு அனுகூலமாகச் செயற்பட வில்லை என்ற காரணத்தினால் இதனைப் புறந்தள்ளி வந்தார்கள்.

கடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த மக்கள் காலகாலமாக சார்ந்து நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்களும் கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுகை தரப்பாக மாறியதன் காரணமாக அவர்களுக்கு இப்போது ஒரு தெம்பு வந்திருக்கின்றது அதன் அடிப்படையில் அம்மக்களுக்குரியவற்றைச் செய்து கொடுக்க வேண்டிய மிகப் பெரிய கடப்பாடு எமக்கு உண்டு. என்ற அடிப்படையில் அந்த வளங்களை நாங்கள் மெல்ல மெல்ல பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆண்டின் அரைப்பகுதியில் தான் இந்த கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தனது கால்களைப் பதித்தது. நாங்கள் மூச்சுப் பிடித்து ஓடத் தொடங்கும் நேரத்திலேயே எங்களுக்கான முடிவிடம் வந்துவிடும் நிலையில் இருக்கின்றோம்.

ஒரு விடயத்தைத் தொடங்குகின்ற போது அதில் ஏற்கனவே இருக்கின்ற பல கஸ்டங்கள் அதற்குரிய பலனை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு விளங்குவது கிடையாது. உண்மையிலேயே கிழக்கு மாகாணத்தினுடைய நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட திசையிலே சென்று கொண்டிருந்தது. மக்களுடைய ஆணை எவ்வாறு இருப்பினும் பரவாயில்லை அதிகாரம் வேறு ஒருவருடைய கைகளிலே இருந்ததன் காரணமாக அந்த அதிகாரத்திற்கு ஏற்ற விதத்திலே தான் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாகத் தான் கல்விப் புலத்திலே பல இறுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றார்.