பாதயாத்திரையில் ஒவ்வொருகணமும் கடவுளைஉணர்கிறேன்-அவுஸ்திரேலிய வென்

எனது வாழ்க்கையை மாற்றியது இப் பாதயாத்திரை- பெர்ணாண்டோ!
காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு பெருவரவேற்பு:பக்தர்கள் கருத்து!
(காரைதீவு   சகா)

 
உலகெங்கும் சென்று கடவுளை தேடிய எனக்கு இப்பாதயாத்திரை ஒரு பதிலைத்தந்தது.பாதயாத்திரையில் கலந்தகொள்ளும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கணமும் நான் கடவுளை உணர்கிறேன்.
 
இவ்வாறு காரைதீவில் கதிர்காம பாதயாத்திரைக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட பெருவரவேற்பு வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த பாதயாத்திரிகர் வென் பக்கியாட் கூறினார்.
 
வேல்சாமி தலைமையிலான கதிர்காமப் பாதயாத்திரைக்குழுவினருக்கு நேற்று(5)மாலை காரைதீவு பிரதானவீதியில் பெருவரவேற்பளிக்கப்பட்டது.
 
குழுவில் 121அடியார்கள் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களில் அவுஸ்திரேலியநாட்டு பிரஜை வென் சிங்கள பாதயாத்திரிகர் பெர்ணாண்டோ மிருசுவில் வினாசித்தம்பி மற்றும் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் ஆகியோர் கருத்துரைத்தனர்.
 
முருகபக்தர் சண்முகம் தேவதாசனின் வீட்டில் அடியார்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டபின் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வென் மேலும் உணர்வுபூர்வமாகக்கூறுகையில்:
 
கடவுள் எந்கே இருக்கிறார் ? என்பதையறிய தேடிக்கொண்டிருந்தேன்.பலரிடமும் கேட்டேன். பல இடங்களிலும் தேடினேன்.பதில் கிடைக்கவில்லை.
 
இந்தியா சென்று இமயமலைக்குச் சென்றேன். அங்கு மரங்களும் மலைகளும் அழகாகக்காட்சியளித்தன. பல தத்துவரீதியான கருத்துக்களை அறிந்துகொண்டேன். மலையடியில் பல சித்தர்hகளுடன் பேசினேன் கதைத்தேன். என்றாலும் கடவுளைக்காணவில்லை. தொடர்ந்து தேடினேன்.
 
தமிழர்களின்  கலைகலாசாரம் பாரம்பரியம் அற்புதமானவை.
நான் பிஎச்டி கலாநிதிப்பட்டத்தை நிறைவுசெய்வதற்கான ஆராய்ச்சிப்பத்திரம் தயாரிக்கவென இலங்கைவந்தேன்.
 
இங்குள்ள தமிழர்கள் அறிவுபூர்வமானவர்கள். தமிழர்களின் நல்லகுணங்களைக் கண்டேன். அவர்களது கலைகலாசாரம் பாரம்பரியம் அற்புதமானவை.இயற்கையோடு ஒட்டியவை.விஞ்ஞானபூர்வமானவை. யதார்த்தமானவை.
 
பிரபஞ்சத்தின் அறிவு குடும்பத்தின் அறிவு அனைத்தையும் பெறமுடிந்தது.ஆனால் கடவுளைக்காணமுடியவில்லை.தேடினேன்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்குச் சென்றிருக்கின்றேன். அங்கு ஆயிரக்கணக்கான மக்களைக்கண்டிருக்கின்றேன்.அழகான உடைஉடுத்த குருக்கள்மாரைக்கண்டிருக்கின்றேன்.பேசியிருக்கின்றேன். எனினும் எனது கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.
இந்தநிலையில்தான் வேல்சாமி பாதயாத்திரை பற்றிக்கேள்விப்பட்டேன். அவருடன் செல்ல அவரின் அனுமதிகேட்டேன்.அவர் தந்தார். 
ஒவ்வொரு கணமும் கடவுளை உணர்கிறேன்
சக அடியார்களுடன் நானும் இணைந்து அத்தனை செயற்பாடுகளிலும் கலந்துகொள்ளும்போது என்னையறியாமலே மனதுள் ஒரு புத்துணர்வு. ஏதோ பேசுகின்றது போல் ஒரு உணர்வு. 
பாதயாத்திரையில் கலந்துகொள்ளுகின்ற ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கணமும் கடவுளை உணர்கிறேன். எனினும் கடவுளைக்கண்டதாகஇல்லை. ஆனாலும் என்னுள் ஒரு ஞான ஒளி தோன்றுகிறது.
 
பாதயாத்திரையில் நிறையவிடயங்களைகற்றுவருகின்றேன். தினமும் ஒவ்வொருவகையான புத்துணர்வு கிடைக்கின்றது.
தமிழர்களின் மனிதாபிமானம் பரோபகாரம் விருந்தோம்பல் என்னை மெய்சிலிர்க்கவைக்கின்றது. வரும்வழியில் அவர்கள் காட்டிய பரிவு புது அனுபவங்களைப் பெறமுடிந்தது.
இந்து தத்துவம் அற்புதமானது.இந்த பாதயாத்திரை ஆழமானது. சாமானியமானதல்ல.வேல்சாமி உள்ளிட்ட ஒவ்வொரு அடியார்களுக்கும் உதவுகின்ற அனைவருக்கும் நன்றிகள் என்றார்.
 
நீர்கொழும்பைச்சேர்ந்த சிங்கள முருகபக்தரான கே.பெர்ணாண்டோ கூறுகையில்:
நான் 2014முதல் இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்கின்றேன்.ஒருதடவை யாழ்ப்பாணம் சென்றபோது உமையாள்புரத்தில் வேல்சாமி ஜயாவைக்காணமுடிந்தது. அப்போது எனக்கு தமிழ் தெரியாது.அவரிடம் பாதயாத்திரையில் இணைய விரும்பம் தெரிவித்தேன். அவரும் பெருமனதுடன் இணங்கினார்.
இது எனது 4வது பயணமாகும். இம்முறை நான் கதிர்காமத்திலிருந்து கால்நடையாக தன்னந்தனியனாக யாழ்ப்பாணம் செல்வச்சந்நதிக்குச்சென்று திரு வேல்சாமியோடு இணைந்து தற்போது வந்துகொண்டிருக்கின்றேன்.
இந்த பாதயாத்திரை எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று ஆன்மீகப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றேன்.என்றார்
தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் கூறுகையில்:
1999முதல்  அமெரிக்க முருகபக்தர் பற்றிக் ஹரிகன் சுவாமி தலைமையிலான குழுவினருடன்  இணைந்து நான் பாதயாத்திரையை மேற்கொண்டுவந்தேன். 2007இல் அவர் தலைமைதாங்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை எனது தலைமையில் இக்குழுவினர் ஒவ்வொருவருடமும் பாதயாத்திரையை மேற்கொண்டுவருகின்றேன்.
பாதயாத்திரைக்காலமென்பது அற்புதமானவை.
 
எமது சங்கஆலோசகர் தம்பி சகா கூறுவதுபோல வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3மாகாணங்களையும் 7மாவட்டங்களையும் இணைத்து 56நாட்கள் 572 கிலோமீற்றர் தூரம் பயணிப்பதென்பது அந்த முருகப்பெருமானின் அருளிலேயாகும்.
அனைத்திற்கும் முருகப்பெருமான்தான காரணம். எமக்கு ஒத்துழைப்பு உதவி நல்குகின்ற அனைத்த உள்ளங்களுக்கும் நன்றிகள்.என்றார்..
 
காரைதீவு மக்கள் சார்பாக சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் நன்றிகூறினார்.