“இப்தார் விருந்து கொடுத்து மைதானத்தில் கைவைக்கலாமா? தளவாயில் பாடசாலைக் காணி அபகரிப்பு முயற்சி

தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் சொந்தமான காணியை, அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சிப்பதை எதிர்த்தும் மைதானத்தின் குறுக்கே அமைக்கப்பட்ட வேலியை அகற்றுமாறு கோரியும் இன்று (07) கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் என அதிகமானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடசாலையுடன் இணைந்ததாக மைதானம் காணப்படுகிறது. மைதானத்தின் கிழக்கே ஏறாவூரைச் சேர்ந்த சரிபுத்தம்பி புகாரி முகம்மது என்பவர் தைமானத்தின் குறுக்கே வேலி அமைத்து சட்ட விரோதமாக அபகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் காணியை பாடசாலையிடம் ஒப்படைக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“இப்தார் விருந்து கொடுத்து மைதானத்தில் கைவைக்கலாமா? தேங்காயப்பூவும் பிட்டும் பாடசாலை மைதானத்தில் இல்லையா?, பேச்சில் நல்லிணக்கம் செயலில் காணி அபகரிப்பா? எல்லே விளையாட்டில் சாதனை மைதானம் இல்லாமை சோதனை, சீண்டாதே சீண்டாதே மாணவர் சமூகத்தைச் சீன்டாதே, அதிகாரமா? அத்துமீறலா?, மயங்க மாட்டோம் மாறமாட்டோம் மைதானம் கிடைக்கும்வரை, பாடசாலை மைதானம் மாற்றானின் கையிலா?, விடுவி விடுவி மைதானத்தை விடுவி, நேற்றுவரை இல்லாத உரிமை இன்று முளைத்தது எப்படி,  உடமைகளைப் பெற்றுத்தருவது அதிகாரிகளின் கடமையல்லவா?, சுரண்டாதே சரண்டாதே பாடசாலைக் காணியை சுரண்டாதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களையெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் பிரசன்னமாகிய ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் கருத்து தெரிவிக்கையில், “குறித்த காணி தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. காணி தொடர்பாக ஆராந்துபார்க்கையில் இது அரச காணி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காணியை 2017.08.04 ஆந்திகதிக்கு முன்பு ஒப்படைக்குமாறு காணியை அபகரித்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திகதிக்கு முன்பு காணியை ஒப்படைக்காத பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்” என்றார்.