இந்தவருடமும் சாதனை படைத்தது பன்சேனை பாரி வித்தியாலயம்.

(படுவான் பாலகன்)  கிழக்கு மாகாணமட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணி சம்பியனாக தேர்வாகி தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளின், உதைபந்தாட்ட போட்டிகள் வியாழக்கிழமை(06) கல்முனை உவெஸ்லி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இதில் வலயமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

போட்டியின் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பெண்கள் அணியினரும், பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அம்பிளாந்துறை அணியினரை எதிர்த்தாடிய, பன்சேனை அணியினர் மூன்று கோள்களை இட்டு, மூன்றுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் சம்பியனானது.

கடந்த வருடமும் பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினர் மாகாணமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, தேசியமட்டத்தில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.