மகாநாயக்கர்களுக்கு அறிவிக்கப்படாமல் புதிய அரசியலமைப்பு சபைக்கு வராது- ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பு தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் மகாநாயக்கர்களிடம் அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) மூன்று மகாநாயக்க தேரர்களிடமும் உறுதியளித்துள்ளார்..

இன்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் மூன்று மகாநாயக்க தேரர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இதனை ஜனாதிபதி தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு இறுதித் தீர்மானத்துக்கும் வரவில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒரு பெரும் கருத்துப் பரிமாற்றமொன்று நாட்டிற்குள் இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் இது தொடர்பில் அறிக்கைப்படுத்துவதாயின், நாட்டின் எதிர்காலம், நலன்கள் அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே அது இடம்பெறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமய விவகாரங்கள் என்பன தொடர்பாக இந்த சந்திப்பின் போது மகாசங்கத்தினர் தனது கருத்துக்களை வெளியிட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது

(DC   )