வடக்குக் கிழக்கில் தேர்தல் நடைபெற்றாலும், அது மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருந்தது

வடக்குக் கிழக்கில் தேர்தல் நடைபெற்றாலும், அது மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருந்தது. அந்த நிலை இப்போது மாறி அனைவரும் ஜனநாயக முறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளோம் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்..

மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

ஆசியாவிலே ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துகின்ற ஒரு நாடாக விளங்குகின்றோம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் குழப்பங்கள் ஏற்பட்டாலும் தேர்தல் முறைமையில் இருந்தும் ஜனநாயக வழிமுறையில் இருந்தும் விலகாத நாடு என்ற பெருமைக்குரிய இந்த நாட்டிலே வாக்காளர் தினம் என்பது மிகவும் ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றது. இன்று இலங்கை முழுவதும் வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட  அனைத்து இடங்களிலுமே இந்த ஜனநாயக தேர்தல் முறைக்குள்  உள்வாங்கப்பட்டு  இருக்கின்றது.

ஒரு கால கட்டத்திலே வடக்கு கிழக்கிலே தேர்தல் நடைபெறுவதும் அதிலே அனைவரும் வாக்களிப்பதும் கட்டுப்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருந்த போதும் தற்போது அனைத்து இடங்களும் அனைத்து மக்களும் அந்த ஜனநாயக முறைக்கு உள்வாங்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த வகையில் தான் கடந்த பொதுத் தேர்தலிலே இந்த பகுதியிலே வாழ்கின்ற மக்களுடைய வாக்குக்கள் ஆட்சியை மாற்றுகின்ற ஒரு பலமிக்கதாக வாக்குகள் ஆக்கப்பட்டிருந்தது.

எனவே தான் அந்த வாக்காளர் தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான சந்தர்ப்பம் தேர்தல் திணைக்களத்தினால் முழுமையாக அவர்கள் தங்களுடைய வாக்குரிமையை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வது. பின்னர் திருத்தம் செய்து கொள்வது இதை விட வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கை பிரஜை கூட தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யக் கூடிய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த செய்தி வந்து மக்களை சென்றடைய வேண்டும். வாக்காளராக தன்னை பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களுடைய சகல நடைமுறைகளுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கும் அதே நேரத்திலே அந்த நாட்டிலே சரியான ஜனநாயக முறையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டினது இந்த மாகாணத்தினது இந்த மாவட்டத்தினது சரியான அரசியல் தலைமைத்துவங்களை தேர்ந்து செய்வதற்கும் இந்த வாக்காளர் முறை மிகவும் அத்தியவசியமான விடயம்.

எனவே ஒரு வாக்கினால் தீர்மான்க்கப்படுகின்ற தலைமைத்துவங்கள் இந்த நாட்டிலே இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு வாக்கும் பெறுமதியான விடயம். நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற விடயம். எனவே வயது வித்தியாசம் இன்றி வர்க்க வித்தியாசம் இன்றி அனைவரும் தமது வாக்குகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தினத்தினுடைய முக்கியத்துவம். இதனை பதிவு செய்கின்ற கிராமசேவையாளர்கள் அதனோடு அத்தனை பிரதேச செயலாளர்கள் இங்கிருக்கின்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் இங்கு பிரசன்னமாகி இருக்கின்றார்கள். எனவே இந்த தினத்தின் முக்கிய தேவை மக்களின் விழிப்புணர்வூட்டும் தினமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.