தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் இயற்கை முறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள்

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தலைவியாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இயற்கை முறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள்  வழங்கிவைக்கப்பட்டன..

மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி பிரதேசத்தில் நீண்ட காலமாக கடற் தொழிலில் ஈடுபட்டு வாழாவாதாரத்தினை இழந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இயற்கை முறை பயிர்ச்செய்கை கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 10பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களை கோரளைப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.முரளிதரன், கே.கங்காதரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் இயற்கை முறையிலான உற்பத்தியினை மேற்கொண்டுவரும் பயிர்ச்செய்கையளர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையில் 23 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மிகுதியானவர்களுக்கும் இயந்திர உபகரணஙக்ள் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

அத்துடன், இந்த பயிர்ச்செய்கையாளர்களுடைய உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்துதல் மற்றும் வியாபாரத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் மாங்கேணியில் விற்பனை நிலையம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் வாhழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.