கிழக்கிலே உள்ள கஸ்டங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். முதலமைச்சரை நாம் ஏன் விட்டுக்கொடுத்தோம்.

கிழக்கிலே உள்ள கஸ்டங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் சிலர் நினைக்கின்றார்கள் நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏழு உறுப்பினர்கள் இருக்கின்ற முஸ்லீம் காங்கிரசிற்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து விட்டோம் என்று  இவ்வாறுகிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்..
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் கல்விப் பொதுத்தராதர உயர்தர கலைப்பிரிவு ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.இதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
அது அப்படியல்ல நாங்கள் இந்த நிர்வாகத்திற்கு வருகின்ற போது ஏற்கனவே ஒரு முதலமைச்சர் நியமிக்கபட்டு விட்டார் அவரை விலக்கி விட்டு நாங்கள் ஒரு முதலமைச்சரை நியமிக்கக் கூடிய அளவிற்கு பத்தொன்பது பேர் எங்களிடம் இல்லை. ஒரு சிங்கள உறுப்பினர் சொன்னார் நான் பெரும்பாண்மை எடுக்கின்றேன் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் இங்கு ஒரு சிறுபான்மை இனத்தவரவே முதலமைச்சராக வர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே அந்த விடயம் கையாளப்பட்டது. இது கூட்டல் கழித்தல் விடயம் அல்ல எனவே இவ்வாறான விடயங்கள் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வட மாகாண சபையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது நாங்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜே.ஆர் ஜெயவர்த்தன நாங்கள் தமிழ் ஈழம் கேட்ட போது தூக்கிக் கொடுத்திருக்க வேண்டும் அப்போது நம்மவர்கள் நமக்குள்ளே அடிபட்டு தமிழீழம் வேண்டாம் நாங்கள் ஒற்றையாட்சிக்குள்ளேயே இருக்கின்றோம் என்று சொல்லியிருப்பார்கள் என்று ஒருவர் விளையாட்டுக்குச் சொன்னார் அனால் இன்று அது சரியாகி விடுமோ என்று அச்சப்பட வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது.

ஒரு விடயத்தைக் கையாள்வதற்கு பல அணுகுமுறைகள் இருக்கின்றன. கூட்டுப் பொறுப்புள்ள ஒரு விடயம் இது. மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பன மரபு ரீதியாக ஆளப்பட வேண்டும். அங்கு சட்டங்கள் பெரிதாக செல்லு படியாகாது. பாராளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்று ஒருவரை அழைத்து அவருக்கு தீர்ப்பு வழங்கக் கூடிய நீதித் தத்துவம் கூட பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் இருக்கின்றது. வட மாகாண சபை விடயம் ஏற்ற அணுகுமுறைகளுடன் நடைபெற்றிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெற்றிருக்காது.

எமது நிர்வாகத்தைப் பற்றி தென்னகம் தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. வட மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் தமிழர்கள் ஆளத்தான் போகின்றார்கள் என்று. ஆனால் தற்போது அனைத்தும் கூழமும் பதருமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றோம். அதனால் நாங்கள் தலை கவிழ்ந்து நிற்கின்றோம்.

இந்த விடயம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியினர் நாங்கள் பேசாமல் இருக்கின்றோம். எங்களுக்கு எதிராக பல பக்கத்தில் இருந்து அம்புகள் எய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அம்புகளை எய்தால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அவர்கள் கொட்டுவதைக் கொட்டட்டும். எமது தமிழரசுக் கட்சி தந்தை செல்வாவினுடைய கட்சி எந்த விதத்திலுமே நாங்கள் கலங்கப்படாதவர்கள்.

ஊழல் அமைச்சர்கள் இருவரை வெளியேற்ற நினைத்தன் காரணமாகத் தான் தமிழரசுக் கட்சி துடிக்கிறது என்று சொல்லுகின்றார்கள் யார் சொல்லுகின்றார்கள் எங்களிடம் மூன்று ஆசனங்கள் கேட்டு நாங்கள் ஒன்று தான் தரமுடியும் என்று கூறியமையால் எம்மை விட்டுச் சென்ற தமிழ் காங்கிரஸ், இன்னுமொருவர் எங்களுக்குள்ளேயே இருந்து விமர்சனங்கள் செய்தார். விமர்சனங்கள் செய்து செய்து மக்களே அவரை நிராகரித்து விட்டார்கள். அது போன்று எம்முடன் இருந்தவர்கள் சிலரும் ஒரு பக்கத்தில் நின்கின்றார்கள். சரியான மழை பெய்யும் போது தான் தெரியும் நரி யார் சிங்கம் யார் என்று.

ஆனால் எமது கிழக்கு மாகாணம் அசையவில்லை. எமது கிழக்கு மாகாணத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உறுதியாகத் தான் இருக்கின்றார்கள். அவர்கள் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள் என்று அறிந்தேன். எமது மாகாண சபை உறுப்பினர்கள் சொன்னார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான் என்று. ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது. ஆனால் தற்போது நாங்கள் அதனை ஒருவாரு சரி செய்து விட்டோம்.

ஏன் நான் இதைச் சொல்கின்றேன் என்றால் நிர்வாகத்தை தமிழர்கள் நடத்த முடியுமா என்கின்ற கேள்விக்கு வடக்கு மாகாணத்தில் சரியான பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் கிழக்கிலே நாங்கள் அதனைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தமிழரசுக் கட்சி யாரையும் கைவிட மாட்டாது. சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. எனவே இவ்வாறான பலத்தை வைத்துக் கொண்டு தான் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் எங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். வருகின்ற அடுத்த கண்டத்தைத் தாண்டி அடுத்த நிலையில் நாங்கள் இவ்வாறு பலமாக நின்றால் மட்டும் தான் இன்னும் பல விடயங்களைச் செய்ய முடியும் என்கின்ற விடயத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.