போக்குவரத்திற்காக தவிர்க்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.

(படுவான் பாலகன்) மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியை அரச போக்குவரத்து சபை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு சிறந்த சேவையை பொலிஸார் வழங்க வேண்டும். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு தினக்கூட்டம்  திங்கட்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே உரிய அதிகாரிகளிடம் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலிருந்து, மட்டக்களப்பு நகருக்கு பல மாணவர்கள் தனியார் வகுப்புக்கு செல்லுகின்றனர். வகுப்புக்கள் மாலை 6மணிக்கு நிறைவு பெறுகின்றது. 6மணிக்கு பின்பு குறித்த பிரதேசத்திற்கு செல்லுவதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மாலை வேளையில் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றதாக எம்மிடம் கூறியிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் 6.15மணிக்கு மட்டக்களப்பு பஸ்தரிப்பிடத்திலிருந்து, பேரூந்து மண்முனை தென்மேற்கு பிரதேசத்தினை நோக்கி பயணிப்பதற்கேற்ற வகையில், மட்டக்களப்பு அரச போக்குவரத்து சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானத்தினை கவனத்தில் கொள்ளாது, மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை கவனத்தில் கொண்டு விரைவாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரச பேரூந்து சபையின் அதிகாரியிடம் குறிப்பிட்டார்.

எமது பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிஸாரின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவில்லையென மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். பிரதேசத்திலே சட்டவிரோத மண்அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, சட்டவிரோத முறையில் கால்நடைகளை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றன. மக்களை பாதுகாப்பதற்காவும், சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்துவதற்காகவும் பொலிஸார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான பொலிஸார் உயரிய சேவையை மக்களுக்கு வழங்கும் பொருட்டு பிரதேசத்திலே இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என பொலிஸ் உத்தியோகத்தரிடம் வலியுறுத்தி கூறினார்.

இதன்போது பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும், அவர்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதில் அரச. அரசசார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.