65ஆயிரம் வீட்டுத்திட்டம் 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது – மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லா

65ஆயிரம் வீட்டுத்திட்டங்களை மிக விரைவாக இன்னும் 3மாதங்களுக்குள் ஆரம்பிக்கவிருக்கிறோம். 3 வருடங்களுக்குள் யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இடம் பெயர்ந்த பிரதேசங்களில் இந்த வீடுகளை அமைப்பதற்கு எங்களது அமைச்சு திட்டமிட்டிருக்கிறது என்று மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் 14 மில்லியக் செலவில் அமைக்கப்பட்ட கணகி அறை, நூலகம், அதிபர் அறை, வகுப்பறைகள் அடங்கிய இரண்டு மாடிக்கட்டத்தினைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியயோர் கௌரவ அதிதிகளாகவும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

உண்மையிலே கடந்த யுத்த காலத்திலே மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக இந்த வவுணதீவு பிரதேசமும் ஒன்றாகும். ஆகவே தான் புனர்வாழ்வு அமைச்சு எனக்கென்று வேறாக ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த பகுதியில் இருக்கின்ற சில பாடசாலைகளை நான் தெரிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.

ஏனென்றால் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கு மேலதிகமாக வவுனதீவு பிரதேச அபிவிருத்திக்குழுவினுடைய தலைவராக என்னை ஜனாதிபதி அவர்கள் நியமித்து இருக்கிறார்கள். ஆகவே வவுணதீவு பிரதேசம்செயலகத்துக்கு உள்ளிட்ட இரண்டு முக்கியமான கஷ்டமான அபிவிருத்தியடைய வேண்டிய இரண்டு பாடசாலைகளை தெரிவு செய்து அதில் எங்களுடைய பாடசாலை கிட்டத்தட்ட 150 இலடசம் ரூபா செலவிலே ஒரு கட்டிடத்தை நாங்கள் ஆரம்பித்து வைத்தோம். இன்று நாங்கள் திறந்து வைத்திருக்கிறோம்

கடந்த ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பவேண்டும். அப்பிரதேச மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். மனையற்ற பிரச்சினைகளுக்குத் தீர:வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல அடிப்படை அம்சங்களோடு தன்னுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு விரைவாக, மக்களுடைய காணிகளை விடுவித்தல், அவர்களுடைய வீட்டுப்பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களிலே சில சில தாமதங்கள் இருந்து வருவதை நாங்கள் உணர்கிறோம். ஆகவே ஜனாதிபதியவர்கள் மிக விரைவாக இந்த வேலைத்திட்டங்கள் நிறைவு பெற வேண்டும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று அடிக்கடி எங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அந்தவகையில் வீடில்லாப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. 65ஆயிரம் வீட்டுத்திட்டங்களை மிக விரைவாக இன்னும் 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கவிருக்கிறோம். 3 வருடங்களுக்குள் யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இடம் பெயர்ந்து அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இந்த வீடுகளை அமைப்பதற்கு எங்களது அமைச்சு திட்டமிட்டிருக்கிறது. அதற்குத் தேவையான நிதிகளையும் இப்போது பெற்றிருக்கிறது. ஆகவே இந்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கவிருக்கிறோம். அடுத்த ஆண்டிற்குள் கணிசமான வீட்டுப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

குறிப்பாக எமது மாவட்டம் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டதொரு மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசம், மிக இன்னல்களைக் கொண்டதொரு பிரதேசம் என்ற வகையில் என்னுடைய காலத்தில் இந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற, இந்து இந்து மத அலுவலக்ள் அமைச்சின் நிதியில், மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தினைப்புனரமைத்தல் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எஸ்.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், கிராம அபிவிருத்திச் சங்களத்தினர், பெற்றார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.