வாகரை பிரதேசத்தின் கண்டலடியிலுள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியை அரசியல் துணையுடன் வேறு மதத்தவர்கள் அபகரிக்க திட்டமிட்டிருந்தார்கள்

வாகரை பிரதேசத்தின் கண்டலடியிலுள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியை அரசியல் துணையுடன் வேறு மதத்தவர்கள் அபகரிக்க திட்டமிட்டிருந்தார்கள் என கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணி திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

மகிந்த ராஜபக்ஷவின் கொடுங்கோல் ஆட்சியிலே போராளிகளுடைய கல்லறைகள் அடித்து நொருக்கப்பட்டதற்கு பின்பு சுமூகமான ஆட்சி வந்ததன் பிற்பாடு எங்களது மண்ணுக்கு தமிழரின் விடுதலைக்காக போராடிய மாவீரர் நினைவாக வாகரைப் பிரதேச மக்கள் இந்த துயிலும் இல்லத்தை மீளெழுச்சி பெற நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பணியை ஆம்பித்தோம்.

இங்குள்ள கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த தவறுவோமாக இருந்தால் எங்களது தேசத்திற்காக தியாகம் செய்தவர்களுடைய கனவுகளை குழிதோண்டி புதைப்பதற்கு சமனாகும்.

வாகரைப் பிரதேசத்தில் தமிழர்களுடைய காணிகள் சுரண்டப்பட்டு காணிகள் பறிபோகின்ற நிலையில் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லத்தை வேறு மதம் சார்ந்தவர்கள் காணியை அபகரிக்க திட்டமிட்டிருந்தார்கள். இது அரசியல் துணையுடன் நடைபெற்றதாக மக்கள் தெரிவித்தார்கள்.

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக வாகரைப் பிரதேச மக்களுடன் சேர்ந்து சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளோம். தமிழ் தேசியத்தில் பற்றுள்ள புலம் பெயர் சமூகத்தினர் ஒற்றிணைந்து மாவீரர் கல்லறைகளை புனர்நிர்மானம் செய்து அமைதிப் பூங்காவாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றேன் என்றார்..