களுவாஞ்சிகுடியில் மதுரமாரிக்கு திருச்சடங்கு

கிழக்கு மாகாணத்தின் தலைநகராம் சைவமும் தமிழும் தழைத்தோங்கி மிளிர்வதுமான மட்டுநகரின் தென்னகத்தே பதினாறாம் மையில் தொலைவில் அமைந்துள்ள, பழம்பெரும் பதியாம் களுவாஞ்சிகுடியில் பன்னெடுங்காலமாக கோயில் கொண்டு எழுந்தருளி மதுரமர நிழலில் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு  வேண்டுவனவற்றை ஈந்தருளும், மதுரைமாரியம்மன் ஆலயவருடாந்த அலங்கார உற்சபம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது..

“மாரியென்றால் மழைபொழியும் மண்ணில் வளம் சொழிக்கும் காரியங்கள் கைகூடும்- வாரியினால் செந்நெல் களம் பெருகும் செந்தமிழர் வாழ்வோங்கும் களுவாஞ்சி மதுரமர நிழல் வந்தமர்ந்த மாரியை கைதொழுதாற்கால்” எற்பது இவ்பழமைவாய்ந்த ஆலயத்தின் சிற்பினை எடுத்தியம்பும் வரிகளாகும்.
 களுவாஞ்சிகுடி கிழக்கே நீர் நிலைகளுடன் கூடிய மதுரமரச் சோலைகளினாலும்  அடர்ந்த காடுகளாலும்  சூழப்பட்ட ஒரு குளிர்ச்சி ஒருங்கேபெற்ற இடத்தில்  அதிசயமான முறையில் மதுரமரத்தடியில் அம்பாளுக்குரிய அடையாளம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை வைத்து பூசித்து கொத்துப் பந்தல் அமைத்து உருவாகியதே இவ்வாலயமாகும். மதுரமரத்தடியில் அமையப்பெற்றதால் மதுரமாரியம்மன் என பெயரும் பெற்றது.
       இவ்வாலயத்தின் அனைத்து சடங்குகளும் கிராமியதெய்வ வழிபாட்டின் விதிமுறைகளை பின்பற்றியதாகவே நடைபெற்று வருகின்றது. ஆகமமுறைசார்ந்த குருக்கள் ஒருவரின் தலைமையில் பூசாரிகளினால் இச் சடங்குகள் யாவும் நடாத்தப்பட்டு வருகின்றது. அம்பாளுக்கான திருச்சடங்குகள் அனைத்தையும்  கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவருவது வழமையாகவுள்ளது.
      ஆலய உற்சபத்தின் போது ஊர்காவல் பண்ணுதல், மடிப்பிச்சை எடுத்தல், பாற்குட பவனி, தவநிலை சடங்கு, வீரகம்பம் எடுத்தல், தீமூட்டுதல், கன்னிமார் பிடித்தல், நெற்குத்துதல், பொங்கற்பானை எழுந்தருளப் பண்ணுதல், தீமிதிக்கும் அடியார்களுக்கு காப்புக்கட்டுதல், மஞ்சள் குளித்தல், தீ மிதித்தல், சக்கரையமுது, கும்பம் சொரிதல், தேவாதிகளுக்கு பொலிகருமம், வாழி பாடல் போன்ற கிராமிய தெய்வழிபாட்டு முறையுடன் கூடிய அனைத்து சடங்ககளும் சிறப்பாக நடைபெறுகின்ற ஆலயமாக இவ்வாலயம் அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றது.
 உற்சவகாலத்தில்  மனக்குறையுடன் வரும் பக்தர்களை குறிப்பறிந்து தேவாதிகள் அருள்வாக்கு சொல்வது, இவ்வாலயத்தின் முக்கிய அம்சமாக  அமைந்துள்ளது. மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வின் போது எழுந்தருளப்பட்ட கும்பம் அம்மனாக நிலைநிறுத்திய ஒருவரின் கையில் வழங்கப்பட்டு கிராமத்தினை சுற்றி வலம்வருவது வழமையாகவுள்ளது. இதன்போது பக்தர்கள் நிறைகுடம் வைத்து அம்பாளின் ஆசியை பெற்றுக்கொள்கின்றனர். இதன்போது நோய் நெடிகள் மனக்குறைகள், வினைகள், என்பவற்றை குறிப்பறிந்து  அம்பாள் இவற்றிக்கான பரிகாரங்களையும் கூறுவது கிராமக்களை மெய்சிலுக்க வைக்கின்ற விடயமாக அமைந்து வருகின்றது.
05 ஆம் திகதி புதன்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு பூசைகள் ஆரம்பமாகும். 06 திகதி வியாழக்கிழமை ஊர்காவற் பண்ணுதலும், மடிப்பிச்சை எடுத்தலும் நடைபெறும் 07 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாற்குடபவனி, இரவு தவநிலைச்சடங்கு நடைபெறும். 08 திகதி சனிக்கிழமை வீரகம்பம் எடுத்தல், தீமூட்டுதல், கன்னிமார் பிடித்தல், நெற்குத்துதல், பொங்கற்பானை எழுந்தருளப்பண்ணுதல், தீ மிதிக்கும் அடியார்களுக்கு காப்பு கட்டுதல் என்பன நடைபெறும் 09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை மஞ்ஞள் நீராடல் தீ மிதித்தல், திருக்களிர்த்தி பாடல், கும்பம் சொரிதல், தேவாதிகளுக்கு பொலிகருமம் செய்தல், வாழிபாடுதலுடன் உற்சபவம் இனிதே நிறைவு பெறவுள்ளது. எனவே இவ் உற்சபத்தில் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்றேகுமாறு ஆலயநிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்…