திருத்தம் நிறைவேற்றப்படும் வரை தேர்தல் இல்லை

‘உள்ளுராட்சிமன்றச் சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது’ என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரும் தேர்தல்கள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

‘ஜூலைக் கலவரம் காரணமாக, 1983ஆம் ஆண்டில், மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்துக்கு வரமுடியாமல் போனது. அன்று நான் இங்கு வந்திருந்தால்,  இப்போது தமிழில் பேசியிருப்பேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் தினத்தையொட்டி, தேசிய மட்டத்திலான வாக்காளர் தின வைபவம், இன்று (03), மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர், தொடர்ந்துரைக்கையில் கூறியதாவது,

‘உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திருத்த வரைவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று 4ஆம் திகதி செவ்வாய்க் கிழமையிலிருந்து விரும்பிய நேரத்தில், கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.

‘உள்ளுர் அதிகார சபைகளை ஸ்தாபித்தல் சட்டம், ஜூன் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தத் தடையில்லை என, உள்ளுராட்சி அமைச்சு எங்களுக்கு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, தேர்தல்கள் ஆணைக்குழுவால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தமுடியாது.

‘அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி கலந்துரையாடி, இந்த உள்ளுராட்சிமன்றச் சட்டத்தை நிறைவேற்றி விரைவாக தேர்தலை நடத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

‘எவ்வித பேதமுமின்றி, அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கின்ற ஒரு விடயமே தேர்தலாகும். நிற, மத, மொழி, சாதி, சமய, இன வேறுபாடின்றி, அனைவருக்கும் கிடைக்கின்ற ஒரு விடயமே வாக்களிக்கும் உரிமையாகும். இலங்கையில் வாழுகின்ற மக்கள், 18 வயது பூர்த்தியடைந்ததும், வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர்.

‘மரணத்தை பெற்றுக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. பேதமின்றி அனைவரும் விரும்புகின்ற ஒரு விடயமே வாக்களிப்பதாகும். நமது வாக்கின் மூலமே நல்ல தலைவர்களைத் தெரிவு செய்துகொள்ள முடியும். அப்போதுதான் நாடு அபிவிருத்தி அடையும். அப்படி நமது நாடு அபிவிருத்தி அடைந்தால், அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவேண்டிய தேவை இருக்காது. நல்ல அபிவிருத்தி ஏற்படுவதற்கு, நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு, நமக்கு வள்ளம் தேவை இல்லை. வாக்கே தேவை. அதனால், நமது வாக்கைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

‘புத்தகத்தில் பெயரிருந்தால் உங்களுக்கு வாக்குரிமை உண்டு. புத்தகத்தில் பெயரில்லையேல், உங்களுக்கு வாக்குரிமை இல்லை. இதைத்தான் நாங்கள் சொல்கின்றோம். இதனால், கிராம அலுவலர் விநியோகிக்கும் வாக்காளர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அதைப் பூர்த்திசெய்து, அதனை கிராம அலுவலர்களிடத்தில் ஒப்படைத்து, வாக்களார் இடாப்பில் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

‘கிராம அலுவலர்கள் வீடு தேடிச்சென்று, இந்த வாக்காளர் விண்ணப்பப் படிவத்தை வழங்கி, அதனை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமான விடயம் என்னவெனில், வாக்காளர் இடாப்பில் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

‘ஆனால் நாங்கள் வாக்களிப்பதற்கு தேர்தல் ஒன்று நடத்தப்படல் வேண்டும். நாட்டில் தேர்தல் ஒன்று இல்லாத காரணத்தினால், மக்கள் இதில் விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். சில நேரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் மக்கள் ஏசுகின்றார்கள். தேர்தலை நடத்துகின்ற பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது. தேர்தலை நடத்துகின்ற சட்டங்களை நிறைவேற்றுவது நாடாளுமன்றமாகும்’ என, அவர் மேலும் தெரிவித்தார்.