யாழ். மயிலிட்டி பகுதியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காணியில் 54 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அடங்கலாக 54 ஏக்கர் காணி, யாழ்ப்பாணம் பாதுகாப்புத் தலைமையகத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன குறிப்பிட்டார்.

காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்டுள்ள காணியில் 50 குடும்பங்கள் வரை மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் இடப்பெயர்வுடன் மயிலிட்டி மக்கள் முற்று முழுதாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த இருபத்தேழு வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்து வாழ்க்கையை நகர்த்திய இந்த மக்களுக்கு இன்று விடிவு மலர்ந்துள்ளது.

தங்களின் காணிகளை விடுவிக்கப்பட்டது போல விரைவில் மீள்குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மயிலிட்டி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.