தமிழ் முஸ்லிம் தரப்புக்கு சவாலாக அமையவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தல்.

(வேதாந்தி)

கிழக்கில் தற்போது எல்லாருடைய எதிர்பார்ப்பும் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் எப்போது நடைபெறப்போகின்றது என்பதாகும்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதியுடன் முடிவடையவுள்ள கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலத்தையடுத்து அதற்கு முன்பாகவே மாகாணசபை கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்பு தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி சிலதகவல்களை உள்ளடக்கியதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது..
கிழக்கு மாகாணசபையை தமிழ்தேசியகூட்மைப்பும்,முஸ்லிம்காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஆட்சியமைத்த போதிலும் கூட்டமைப்பிடம் பெரும்பான்மை இருந்தும் 7 ஆசனங்களைக்கொண்ட முஸ்லிம்காங்கிரஸ்னருக்கு முதலமைச்சர் பதவியினை கூட்டமைப்பு விட்டுக்கொடுத்தது.இவ்வாறு முதலமைச்சுப்பதவியினை விட்டுக்கொடுத்தமைக்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்புக்கு பலத்த எதிர்ப்புக்கள் ஏற்பட்டு இருந்தன. இருந்தும் நீண்டகால நோக்கை அடிப்படையாகக்கொண்டும் வடகிழக்கு இணைப்பு, யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவினை கட்டியெழுப்புதல்,நாம் தமிழ் பேசும் சமுகம் நாம் இணைந்தே செயற்படவேண்டும், கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் குறிப்பாக கிழக்கில் ஒருமித்தேவாழவேண்டும் என்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் தமிழ் தரப்பினர் விட்டுக்கொடுத்து செயற்பட்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் தரப்பினருக்கு வழங்கப்பட்ட காரணங்கள் சரியாக இருந்தபோதும் இந்தவாய்ப்பினை முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியாக கையாண்டார்களா? ஏன்பது கேள்விக்குறியாகும். நல்லிணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட பொறுப்பினை பயன்படுத்தி தமிழர்களை ஓரம்ம்கட்டடி தங்கள் பிரதேசங்களையும், மக்களையும் வளப்படுத்துவதில் காட்டிய அக்கறை  ; தமிழர்களுடன் நல்லிணக்கத்தைப்பேணவேண்டும் என்பதில் காட்டவில்லையென்பது வெளிப்படையான குற்றச்சாட்டாகும்.
கிழக்கு மாகாணகூட்டாட்சியின் பின்பே தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தேகக்கண்கொண்டு பார்க்கக்கூடியநிலை ஏற்பட்டு இனிவரும் தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக வாக்களித்து பெரும்பான்மை ஆசனங்களைப்பெற்று பெரும்பான்மைக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து முதலமைச்சரை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு இன்று கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பட்டிதொட்டியெல்லாம் பேசப்படுகின்ற விடயமாகும்.
இது இவ்வாறு இருக்க எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதே அடுத்த விடயமாகும்.
கிழக்கில் பேசப்படுகின்ற சக்தியாக தமிழ் தேசியகூட்டமைப்பு காணப்படுகின்றபோதிலும், எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவேண்டும்,பிள்ளையான், கருணாபோன்றோரையும் இணைத்து போட்டியிட்டு வாக்குகளை பிரிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகள் சமுகவலைத்தளங்களிலும் கருத்துக்கள் கூறிவருகின்றபோதிலும் இது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது கூட்டமைப்பில் போட்டியிடகிழக்கில் பலர் முன்னியடித்துக்கொண்டு முன்னுக்கு வருவதை அவதானிக்கமுடிகின்றது. எது எப்படியோஅரசியலுக்கு வருபவருக்கு துணிவு , நேர்மை, அர்ப்பணிப்பு,திடசங்கர்ப்பம் போன்றவை காணப்படுவதோடு,மக்களை பற்றி சிந்திப்பவனாகவே இருக்க வேண்டும்.
நம்முடைய சிலஅரசியல்வாதிகள் தனக்குத்தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு மிகுதியானவற்றையே மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற சிந்தனையிலேயே உள்ளனர்.இவ்வாறனவர்கள் அரசியலுக்குப்பொருத்தமானவர்களா என்பதை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் தற்போது மக்கள்உள்ளனர். செருப்புடன் அரசியலுக்குவந்தவர்கள் எல்லாம் தற்போது பலகோடி சொத்துகளுக்கு அதிபதியாக நமது மாவட்டத்தில் காணப்படுகின்றனர் இவ்வாறானவர்களை மக்கள் இனம் காணவேண்டிய தேவையும் தேர்தல் காலங்களில் ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்கு வரும் முன்னர் ஒருவரிடம் என்ன தகுதி, செல்வாக்கு, சொத்துக்கள் காணப்பட்டாலும் அரசியலுக்கு வந்தபிற்பாடு சாதாரண மனிதனாக மாறி மக்களுக்கு சேவைசெய்ய மக்களோடு மக்களாக வாழக்கூடியவனே எனது பார்வையில் உண்மையான அரசியல் வாதி என்பேன்.
அண்மையில் எனது முகநூல் பக்கத்தில் எனக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டு அதற்கு என்னென்ன தகுதி வேண்டும் என சிலவிடயங்களை எனது நண்பர்களிடம் இருந்து கறப்பதற்காக பதிவொன்றினை விட்டுஇருந்தேன் அதில்  பெரும்பாலானோர் இட்ட கருத்து தற்போதைய அரசியல் அருவருக்க தக்கது என்பதாகும். இந்நிலை மாற்றியமைக்கபடவேண்டும். உண்மையான அரசியல் வாதிகளை நாம் அரசியலுக்குள் புகுத்த முயற்சிக்க வேண்டும்.
சொத்து சேர்ப்பதற்கே அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணம்மாறி வாழும் போது எம்மிடம் உள்ள சக்தியின் கூடாக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பவர்களே அரசியலுக்கு தேவைஎன்பதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை..
இவ்வாறான சூழலில் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்பு பெரும்பான்மையாக வாக்குகளைப்பெறும் போதே போனஸ் ஆசனங்களை பெறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.அப்படியாயின் வாக்குளை பெறக்கூடிய மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது கூடட்மைப்பின் தலையாய கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப்பொறுத்தவரை வேட்பாளர் தெரிவில் விருப்பு வெறுப்போ செல்வாக்கோ குட்டிராசாக்களின் தலையீடுகளோ இருக்கக்கூடாது என்பதே தாழ்மையான வேண்டுகோளாகும்.
மாகாணசபைத்தேர்தலில் மட்டிலிருந்து 11பேர்  அங்கத்தவராக தெரிவு செய்யப்படுவர் இதற்காக ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 14பேர் போட்டியிடவேண்டும்.இந்த 14 வேட்பாளர்களையும் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவு செய்யப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.மாவட்டத்தில் 10 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகள் உண்டு தெரிவில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்வாங்கவேண்டும். அதனடிப்படையில் கட்சிபேதங்கனைள மறந்து வாக்குவங்கிகளை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவேண்டும்.
எனது பார்வையில் வாகரை -1,வாழைச்சேனை-1,கிரான்-1,செங்கலடி-1,வவுணதீவு-1,பட்டிப்பளை-1,வெல்லாவெளி-1,ஆரையம்பதி(மண்முனை)-1, களுவாஞ்சிக்குடி-3, மண்முனைவடக்கு-3 என்ற விகிதத்தில் வாக்காளர் தெரிவு இடம்பெறுமாயின் மாவட்டத்தில் கூட்டமைப்பு கணிசமான வாக்குகளை பெறக்கூடிய சாத்தியம் உண்டு.
மாவட்டத்தைப்பொறுத்தளவில் கடந்தகால தேர்தலை வைத்து நோக்கும் போது பல்வேறு விடயங்கள் செல்வாக்குப்பெறுவதைக்காணலாம். குறிப்பாக பிரதேசம், சாதியம், தேசியம்,சமுகசேவை,கல்வித்தகுதி என்பன தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகும்.இவ்விடயங்கள் பட்டிருப்புத்தொகுதியிலும் ,மட்டக்களப்பு தொகுதியிலும் செல்வாக்கு செலுத்துகின்றன குறிப்பாக களுதாவளைக்கிராமத்தை எடுத்துக்கொண்டால் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் அவருக்கு வாக்களிக்கும் பண்பு இந்தக்கிராமத்து மக்களுக்கு உண்டு. உதாரணமாக புளொட் இயக்கம் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய காலத்தில் புளொட் சார்பில் போட்டியிட்ட பாக்கியராஐ என அழைக்கப்பட்ட புளொட் மாமாவுக்கு களுதாவளை மக்கள் அவர் தங்கள் ஊரைச்சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக 6000ற்கு மேற்பட்ட வாக்குகளை அளித்திருந்தனர்.இம்முறை தேர்தலில் களுதாவளை அண்டிய கிராமங்களில் தேர்வு இடம்பெறாவிட்டால் இந்தவாய்ப்பினை  சோ.கணேசமூர்த்தி தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொள்வார்.
இதே போன்றுதான் படுவான்கரைப்பிரதேசமும் தங்களுடைய பிரதேசத்திலிருந்து யாரை முன்னிறுத்துகின்றார்களோ அவர்களுக்கே முன்னுரிமை வழங்குவர்.
அத்துடன் சாதியமுறையும் தேர்தலில் மட்டக்களப்பில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாகும்.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பிரதேசரீதியாக வேட்பாளர்கள் தெரி இடம்பெறவேண்டிய கட்டாயமானதாகும்.
யார் என்ன சொன்னாலும்தமிழ் மக்களிடையே வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க செய்யவேண்டியது மாவட்டத்தில் பொது அமைப்புக்களினதும்,இளைஞர்களினதும் தலையாய கடமையாகும்.அதேவேளை வேட்பாளர் பட்டியலில் பெண்களும் உள்வாங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் இதுவும் வாக்களிக்கும் வீதத்தை அதிகரித்து வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும்.
இது இவ்வாறு இருக்க கருணாஅம்மான் தலைமையிலான கட்சி மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடாது என்றே தோன்றும், பிள்ளையான் தலைமையிலான கட்சி போட்டியிடக்கூடிய சாத்தியங்கள் உள்ள போதும்,ஐக்கிய தேசிய கட்சி கணேசமூர்த்தி தலைமையில் பெரும்பாலும் 11தமிழர்களையும்,3முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தக்கூடிய சாத்தியம் உண்டு.(சிலவேளை14பேரும் தமிழர்களாக இருக்கலாம்).இவ்வாறு றிறுத்தினால் பட்டிருப்புத்தொகுதியிலும், கல்குடாவிலும் குறிப்பாக வாழைச்சேனையில் கூடுதலான வாக்குகளை  ஐக்கிய தேசிய கட்சி பெறக்கூடிய சாத்தியம் உண்டு. ஏனெனில் கணேசமூர்த்தியின் பிரச்சாரம் தமிழ்தேசியகூட்டமைப்புடன் இணைந்து ;,ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கப்போகின்றது எனவே எங்களையும் மாகாணசபைக்கு அனுப்புங்கள் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வோம் என்பது போலத்தான் அமையும் இதனால் தமிழ் வாக்குகள் பிரிந்து போனஸ் ஆசனத்தில் தாக்கம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களும் இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன உத்தியை கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அத்துடன் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களிலும் வேட்பாளர் தேர்வு நேர்மையான முறையில் இடம்பெறவேண்டும். அம்பாறை மாவட்டம் பல்வேறு தரப்பினரால் பாதிக்கப்பட்டு தற்போதும் பறக்கணிக்கப்பட்டுவருகின்ற மாவட்டம் என்பதை கூட்டமைப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதே போன்று முஸ்லிம் தரப்பு வாக்குகள் 3தரப்பாக பிரிய கூடிய சாத்தியங்கள் உண்டு.பசீர்,ஹசன்அலி,ரிசாத்,அதாவுல்லாதரப்பினர் ஓர்அணியாகவும்,கிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் வேறு அணியாகவும்,ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தனிமையாகவும் போட்டியிடக்கூடிய சந்தர்ப்பங்களே உண்டு இதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரியக் கூடிய சாத்தியங்களே உண்டு.
எதுஎவ்வாறு இருந்தாலும் கிழக்குமாகாணசபைத்தேர்தல் பலப்பரிட்சையாகவே அமையவுள்ளது.தமிழ்தரப்போ முஸ்லிம் தரப்போ கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சரை மையப்படுத்தியே பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.