கிழக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு சாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருகிறார் . எம்.சுமந்திரன்

சமஷ்டி குணாம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே புதிய அரசியலமைப்பு வெளிவரவிருப்பதாகவும் அதுபற்றிய இடைக்கால அறிக்ைக வெளியானதும் மக்களின் சந்தேகங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்..

சமஷ்டி வெளிப்படையாக இடம்பெறாவிடினும், அதனுடைய பிரதான குணாம்சங்களை அடிப்படையாக கொண்டதாகவே புதிய அரசியல் யாப்பு வெளிவரவிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பு உபகுழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு மக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இடைக்கால அறிக்கை கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்த்திருந்த போதும், சில கட்சிகள் தமது கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டுமென்பதற்காக அரசியலமைப்பு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

எதிர்வரும் 4ஆம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நடவடிக்கை குழுவின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் இடைக்கால அறிக்கை வெளிவரும். அதனை கால தாமதமின்றி வெளியிட வேண்டுமென்று அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தெளிவில்லதிருக்கும் மக்களுக்கு அரசியலமைப்பின் வரைபு வெளி வந்தபின்னர் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும். முதலமைச்சர், எவரும் இதுவரை பேசாத 13ஆவது திருத்தத்தைப் பற்றி ஏன் பேசுகின்றார் என்றும் எனக்குப் புரியவில்லை என்றார்.

அரசிலமைப்பில் ஒற்றையாட்சிக்கான “ஏக்கீய ராஜ்ஜிய” என்ற வார்த்தை சிங்கள மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதனோடு இணைந்த சொல்லாகப் பயன்படுத்த வேண்டுமென்ற எமது கோரிக்கைக்கு அரசாங்கம் சம்மதித்துள்ளது. ஒருமித்த நாடு என்ற ஒரு வரைவிலக்கணத்தை மூன்று மொழிகளிலும் எழுதுவதுமட்டுமன்றி அரசியலமைப்பில் எழுதுவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெறுமனே, அதனைப்பிரிக்க முடியாது என்பதற்கான மாற்றுவழியாகவும் இருக்கும் என விளக்கமளித்தார்.

ஏக்கிய ராச்சிய என்பது ஒற்றையாட்சியைக் குறிக்காது என்றும் அவர் கூறினார். 13ஆவது திருத்தம் தான் ஒற்றையாட்சியைப் புலப்படுத்துகின்றதென்பதற்காக 13ஆவது திருத்தத்தை ஒரு பக்கத்தில் வைத்து விட்டோம். அதிகூடிய அதிகாரப் பகிர்வை வழங்குகின்றதா என்ற கேள்வியை மட்டுமே கேட்க வேண்டும். மாகாணம் அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவை இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த அலகாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டைக்கொண்டுள்ளதென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இறுதியில் எவ்வாறு அமையுமென்பதும் சொல்லமுடியாது. மாகாணங்கள் இணங்கினால் மாத்திரமே இணைக்கமுடியும்.

13ஆவது திருத்தத்தைப்பற்றிப் பேசுவதே தவறென்று சொல்லும் இந்த வேளையில், 13ஆவது திருத்தம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தற்போது வெளியிடும் கருத்துக்கள் முரண்பட்டவையாக காணப்படுகின்றன. புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை இன்னும் வெளிவராத நிலையில் முதலமைச்சர் எந்த அடிப்படையில் இவ்வாறான கருத்துக்களை அவர் வெளியிடுகின்றார் என்று தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வருகின்ற தீர்வைக் குழப்பும் நோக்கத்துடன் சிலர் செயற்படுகின்றனர் என்றும் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கின்ற தமிழ்த் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பது அடிப்படை பிரச்சினை. அந்தப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் நாட்டின் அடிப்படைச் சட்டம், சமூக ஒப்பந்தம் என வர்ணிக்கும் அரசியலமைப்பு முற்றாக மாற்றப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த முன்னெடுப்புகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கின்றது. எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும். அதற்கு இவ்வாறான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான வழிகளைப் பயன்படுத்தி விட்டு அந்த வழிகளை அடைப்பதற்கான செயற்பாடுகள் முட்டாள் தனமானது. இந்த அரசாங்கம் நிலைக்க வேண்டும். முக்கிய நோக்கத்திற்கான வழியை அமைத்து விட்டு, அதனை முறியடிப்பதற்காக செயற்படுவது முட்டாள் தனம். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தால் மாத்திரமே எமக்கான தீர்வை அடைய முடியும்.

எமது அடிப்படை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ள வேளையில், அந்த அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதில்லை. எமது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை ஒன்றியதான அரசியலமைப்பு வராது என்ற எண்ணம் வரும்போது அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கமாட்டோம். எமது நிலைப்பாட்டை மாற்றும், அந்த நிலை ஏற்படாது. அதற்கான முழு முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது. குறிப்பாக வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் ஈபி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மனோ கணேசன் போன்றோர் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே தான் வடக்கு கிழக்கு இணைக்க வேண்டுமாயின் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இல்லாது இணைக்க முடியாது என்பதுடன் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் இணைந்து மாகாணசபைகளில் கூட்டாட்சி நடத்திவரும் எமக்கு 11 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கு 7 ஆசனங்கள் இருந்தும் நாம் கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரையே நியமித்திருக்கின்றோம்.

எனவே தற்போதுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு சாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருகிறார்.தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகாவிட்டாலும் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக நினைக்கின்றேன் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Thinakaran