ஜனநாயகத்தை கட்டியெழுப்புகின்ற பலமற்றவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

தமிழ் நாட்டில் தமிழ் தமிங்கிலமாக மாறிவிட்டது. அழகாக தமிழை உச்சரிக்கின்ற எவரையும் அங்கு காண முடியவில்லை.

இந்தியாவின் தமிழ் நாட்டில் தமிழ் மொழியை அழகாக உச்சரிக்கும் தமிழர்களை காணமுடிவதில்லையென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இங்கிருந்து செல்லும் அப்துல் ஹமீத்தை தவிர அழகாக தமிழில் அறிவிப்பு செய்யும் அறிவிப்பாளர்கள் தமிழ்நாட்டில் இல்லையென்ற வெட்ககேடான நிலை தமிழ்நாட்டுக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்..

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டத்தின் மாபெரும் கலை விழா  வெள்ளிக்கிழமை  (30-06-2017) . 2.30 மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் V. சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, நீர்பாசனம், மீன்பிடி, கால்நடைதுறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன்,மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் கே.பாஸ்கரன்,இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற சுமார் 15 கலை நிகழ்வுகள் இதன்போது மேடையேற்றப்பட்டது.அத்துடன் இந்த கலை நிகழ்வுகளுக்கு உயிர்கொடுத்த ஆசான்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விசேட நிகழ்வாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் உள்ள மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் ,மண்முனை வடக்கு அதிபர்கள் நலன்புரி சங்கத்தினால் இந்த நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் தலைமையுரையாற்றியதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

இறுதி நிகழ்வாக மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மாணவர்களின் நாட்டுக்கூத்து அரங்கேற்றப்பட்டமை சிறப்பாகும்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்,

கிறிஸ்துவுக்கு முன்னர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழியாகவும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவும் தமிழ் மொழியுள்ளது.உலக மொழிசிந்தனையை இந்த உலகுக்கு வழங்கிய கனியன் பூங்கொன்றநாதரை எமது பெரும்புலவர்களாக கொண்ட பெரும்பேறுபெற்றவர்கள் நாங்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவர் கூறன்ன என்று ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதன் சிந்தித்திருக்கின்றான் என்றால் அந்த மனிதனுடைய வாரிசுகள் என்று நெஞ்சினை நிமிர்த்திடக்கூடிய பெருமை எமக்கெல்லாம் இருக்கின்றது.

உடலால் அழியின் உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று அந்த சிறப்பான செய்யுளை நடைமுறையில் காட்டுகின்றது யோகா. எங்களுடைய தமிழை வடமொழி விழுங்கிவிட்டது. அதனால் யோகாவிற்குரிய தமிழ்ச்சொல்லைக்கூட நாங்கள் இழந்தவர்களாக இருக்கின்றோம்.

யோகா என்பது எங்களுடைய சித்தர்களால் வளர்க்கப்பட்டு வாரிசுகளாகிய எங்களுக்கு வழங்கப்பட்டவை. அங்கிருக்கின்ற மொழிகளை எங்களால் சிறப்புற பொருள்கொண்டு கடைப்பிடித்திடாததன் காரணமாக ஆரியர்களும் வடமொழியினரும் அவற்றையெல்லாம் அள்ளிச்சென்று மெருகூட்டி அவர்களுடைய மொழியிலே எங்களுக்கு அறிமுகப்படுத்திய பின்பு தான் நாங்கள் விழித்துக்கொண்டோம். ஆனால் எமது திராவிட இனத்தினுடைய சொந்தச் சொத்து யோகாவாகும். வெறுமனே உடலை வளைத்து செய்யப்படுகின்ற யோகாவை ஒரு கலையாக காட்டியிருக்கின்றார்கள்.

தமிழ்மொழியை செம்மொழி என்று நாங்கள் புகழ்ந்தாலும் அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் அது எட்டாவது இடத்தில் இருக்கின்றது. சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்று சொன்னான் பாரதி. எம்மவர்களெல்லாம் எட்டுத் திக்கும் சென்றிருக்கின்றாhர்கள். ஆனால் பாரதி செல்வதைப்பற்றிமட்டும் சொல்லவில்லை. கலைச் செல்வங்கள் யாவும் கொண்டுவந்து இங்கு சேர்ப்பீர் என்று சொன்னான். ஆனால் இங்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள் எவருமில்லை. அடுத்த சந்ததி என்னவாகுமென்று தெரியவில்லை.

ஜனநாயகத்தை கட்டியெழுப்புகின்ற பலமற்றவர்களாக நாங்கள் இருக்கின்றோம். தமிழ் நாட்டில் தமிழ் தமிங்கிலமாக மாறிவிட்டது. அழகாக தமிழை உச்சரிக்கின்ற எவரையும் அங்கு காண முடியவில்லை.

இங்கிருந்து செல்கின்ற அப்துல் ஹமீத்தை தவிர அழகாக தமிழை உச்சரிக்கின்ற அறிவிப்பாளர் எவரும் அங்கு இல்லை என்கின்ற வெட்கக்கேடான நிலை தமிழ் நாட்டில் காணப்படுகின்றது. ஆனால் எங்களுக்கு அது பெருமை. தமிழை இதே நிலைமையில் காத்திட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய்ய நினைத்தாய் என பாரதி கூறினான். அதனை நாமும் கேட்டுப்பார்த்திட வேண்டும். காலத்திற்கு ஏற்றவகையில் நாம் எம்மை வழிநடத்திச் செல்லப்போகின்றோமா அல்லது எமது பழைய வேதப்பிரதாபங்களை சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோமா? சேரரும் சோழரும் பாண்டியரும் செத்து மடிந்துபோனதால் எங்களுடைய இலக்கிய படைப்புகள் நமக்கு எடுத்துச் சொல்கின்ற வழிகள.; எங்கோ இருந்த ஆங்கிலேயன், நாகரீகமில்லாது இருந்த போர்த்துக்கேயன், டச்சுக்காரன் ஆசிய நாடுகளையெல்லாம் ஆட்சி செய்தான். இங்கிருந்த வளங்களையெல்லாம் அள்ளிச் சென்றான். தங்களுடைய மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் வலுச்சேர்த்தான். ஆனால் புகழுடன் வாழ்ந்த எம்இனம் இன்று குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றது.

மிகச்சிறந்த கலைகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கின்ற நாங்கள் அதற்கு ஏற்ற வகையில் எம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தக்கன பிழைத்தல் என்ற கோட்பாட்டிற்கமைய நம்மை தக்கவைத்திட முடியாதவர்களாக நாங்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்.

கொள்ளையடித்தல், கொலை செய்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல் இவையெல்லாம் அநீதிகளென்றால் இவற்றையெல்லாம் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் நாங்கள் செய்தால் அவை நீதியாகும் என்கின்ற கோட்பாட்டினையே உலகம் இன்று பின்பற்றி வருகின்றது.

ஒவ்வொருவரும் தான் சொல்கின்ற விடயத்தை உண்மை என்று நினைத்துக்கொண்டு சொல்கின்றனர். உண்மையை சொல்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். உளம்விட்டு கலந்துரையாட வேண்டும். கலந்துரையாடலில் விட்டுக்கொடுப்பு வேண்டும். அதன் அடிப்படையில் ஏற்கனவே இருக்கின்ற பகைமை ஒழிந்திட வேண்டும். அதன் பின்னர் ஏற்படுகின்ற இணக்கப்பாடுதான் நின்று நிலைத்திருக்கக்கூடிய இணக்கப்படாக இருக்கும். அவ்வாறான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும்போதுதான் உலகம் தழுவிய கொள்கையாக மானுடம் தழைத்து நிற்கும். இது நமக்கும்பொருந்தும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்றால் வெற்றி கொள்வது என்று பொருளல்ல. வென்றார் தோற்றர் என்றில்லாமல் இருவரும் வெற்றிகொள்ளக்கூடிய வகையிலே பேச்சுமேடையில் இருந்துசெல்லும்போது நாங்கள் இருவரும் வெற்றியடைந்துவிட்டோம் என்று தோhன்றும் உளப்பாங்கு மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கு வழிவகுக்ககூடியதாகும்