கிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து மாகாணத்தில் ஆளுனருக்கான வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த ஆளுனர் வெற்றிடத்திற்கு தமிழர் ஒருவரை, நாட்டினது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(02) ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

 

 

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆளுனர் வெற்றிடம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக செயற்பட்ட ஒஸ்ரின் பெர்ணாண்டோ, தனது பதவிக்காலத்தில் சிறப்பான சேவையினை, பக்கச்சார்பின்றி செய்திருந்தார். எந்ததொரு வேலையினையும் வேகமாகவும், விரைவாகவும் மத்திய அரசுடன் தொடர்புகொண்டு செய்கின்ற ஆளுமையினையும் பெற்றிருந்தார். இதன் மூலமாக கிழக்கு மாகாணத்திற்கு தன்னால வலுவினைச் சேர்;த்திருந்தார். தன் கீழ் உள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சிறந்த சேவையாற்றிய ஆளுனர் பதவிக்கு, சிறப்பாக சேவையாற்றக்கூடிய, மாகாணத்திலே வாழுகின்ற அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்ககூடிய ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.
கடந்த காலங்களிலே நாட்டினது பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவரை ஆளுனராக நியமித்து வந்தமையே வரலாறாகும். இவ்வாறான நிலையில், மாகாணத்தின் பெரும்பான்மைச் சமூகமாகவும், கடந்த காலங்களிலே சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடியவர்கள் என்ற வகையிலும் தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.