யாழ்.சந்நதியில் ஆரம்பமான கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில்!

24நாட்களில்4மாவட்டங்களைக்கடந்து நேற்றுவாகரை ;!
(காரைதீவு  சகா)
வடமாகாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த 3ஆம் திகதி ஆரம்பித்த
வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான கதிர்காமப்பாதயாத்திரைக்குழுவினர் 24நாள்
பயணத்தின்பின்னர் நேற்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணம்
வாகரையை வந்தடைந்தனர்.


யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய 4
மாவட்டங்களைக்கடந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்னும் 5நாட்களில் அம்பாறை  மாவட்டத்தை சென்றடைவர்.
வழிநெடுகிலும் பாதயாத்திரைக்குழுவினருக்கு அமோக வரவேற்பு
அளிக்கப்பட்டது.குறிப்பாக கோபாலபுரத்தில் நிறைமுட்டிகள் வைத்து கோலாகலமான
வரவேற்பளிக்கப்பட்டது.

நேற்று மாங்கேணி சித்திவிநாயகர் ஆலத்தில்வைத்து தலைவர் வேல்சாமியோடு
தொடர்புகொண்டபோது அவர் கூறியதாவது:.
கடந்த 24நாட்களாகப் பயணித்து எவ்வித சிக்கலுமில்லாமல் முருகப்பெருமான்
அருளால் திருமலைவந்து சேர்ந்துள்ளோம்.தற்சமயம் 96அடியார்கள் எமது
பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரஜை மைக்கல்வென் நீர்கொழும்பு சிங்கள அடியார் பெர்ணாண்டோ
உள்ளிட்ட பாதயாத்திரீகர்கள் வரும்வழியில் தங்குகின்ற ஆலயங்களில் பஜனைகள்
நடாத்துவதோடு சிரமதானத்திலும் ஈடுபட்டுவருகின்றோம்.வெருகல்
முருகனாலயத்தில் அங்கப்பிரதட்சணமும் செய்தோம். எமது பயணம்
சுகானுபவமாகவிருக்கிறது.
எதிர்வரும் ஜூலைமாதம் 15ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படவிருப்பதாக
அறிகிறோம். எனவே இன்னும் 18நாட்களில் நாம் மட்டக்களப்பு கல்முனை காரைதீவு
திருக்கோவில் பாணமை கடந்து உகந்தமலையை அடையவேண்டும். எமது
நிகழ்ச்சிநிரலின்படி ஜூலைமாதம் 14ஆம் திகதி உகந்தையை அடைவதாக
திட்டமிட்டிருந்தோம்.
முருகப்பெருமான் அருளால் உகந்தையை அடைந்து காட்டுப்பாதையால் வழமைபோல்
முதல்முதல் பிரவேசித்து 23ஆம் திகதி கதிர்காமக்கொடியேற்றத்திற்கு
செல்வோம்.