பிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’

(படுவான் பாலகன்)  மாதுறுஓயா வலதுகரைத்திட்ட அபிவிருத்தியின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களின் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் திங்கட்கிழமை (26) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது ‘கோறளைப்பற்றுத் தெற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த ஆண்டில், மாதுறுஓயா வலதுகரைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் வயல் காணிகளையும்  மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளையும் மக்களுக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே> இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் மூவின மக்களின் விகிதாசார அடிப்படையில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இங்கு வாழ்கின்ற மக்களின் விகிதாசாரத்துக்கு   முரணான வகையில் எந்த இன மக்களுக்கும் காணி வழங்கி அபிவிருத்தி செய்யும் திட்டம் அமுல்படுத்தப்படுமானால்> அது விகிதாசாரத்தையும் இனப்பரம்பலையும் மாற்றும். இது திட்டமிட்ட குடியேற்றத்துக்கு வழிவகுக்கும்.

மேலும்> ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரலக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் மாதவணை> மயிலத்தமடுவில் அத்துமீறிக் குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.  அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 126 பேரைக் கொண்ட பெயர்ப்பட்டியல்> இவ்வருட மார்ச் மாத மகாவலித்திட்ட அறிக்கையுடன்; இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் பெயர்கள் அந்த  அறிக்கையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இனப்பரம்பலுக்கு ஆபத்து ஏற்படாமலும் வெளியேற்றப்பட்டவர்களை அபிவிருத்தி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாமலும் இருப்பதால் மட்டுமே இந்த அபிவிருத்தியில் நன்மை கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.