முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்காக நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அநிருத்தனன் அறிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிறப்பு, இறப்பு, விவாகப்பதிவுகள், பதிவு சான்றிதழ்கள், மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம், காணிப் பிணக்குகள், காணி அனுமதி பத்திரங்கள் தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தின் சேவைகள், வேலைவாய்ப்பு, அழகுக்கலை தொடர்பான ஆலோசனைகள், ஆகியன உட்பட மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றின் கீழ் உள்ள 53 நிறுவனங்களின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

ஆகவே ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மேற்படி பிரதேச செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.