கஸ்டப்பிரதேசங்களை இனங்காட்டி நியமனம் பெற்ற பின்னர் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.

(படுவான் பாலகன்) கஸ்டப்பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை இனங்காட்டி அரச நியமனங்களை பெறுகின்றனர். நியமனத்தினை பெற்றதும் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற சூழலும் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது. என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பொறியிலாளர் ஏ.எம்.எம்.ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட படையாண்டவெளி பாடசாலையில் புதிய கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,


இடமாற்றம் பெற்றுத்தருமாறு மாகாணசபை உறுப்பினர்களிடம் வருபவர்களிடத்தில், அவ்வாறான இடமாற்றங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக அறிகின்றோம். அவ்வாறான முடிவுகள் வரவேற்கதக்கவை.

பருவகால தொழில்கள் வருகின்ற போது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்லுகின்ற வரவு வீதம் குறைவாக இருப்பதனை அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. இதனால் கல்வியிலும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு கஸ்டத்தினை புரிய வைக்க வேண்டும். அதற்காக மாணவர்களை தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது.

எமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்படும், கட்டடங்கள் தொடர்பில், பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக எமக்கு அறியத்தாருங்கள், அவற்றிற்கான தீர்வினை உடனடியாக வழங்க தயாராக இருக்கின்றோம். எம்மால் முடிந்தவரை அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் செய்து கொண்டிருக்கின்றோம். என்றார்.