தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின், குடிம்பிமலை கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட தரவைப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை குடும்பிமலை கிராம அபிவிருத்திச் சங்கம், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர், இன்று (26) துப்புரவு செய்தனர்.

யுத்த காலத்தில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்காக, தரவை துயிலும் இல்லம் அமைக்கப்பட்ட நிலையில், யுத்தம் முடிவடைந்த பின்னார் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, குறித்த மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த இடங்களை எல்லைப்படுத்தி,பொது மயானமாக ஆக்கும் நோக்கில், குடிம்பிமலை பகுதியிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்வந்து பொது மயானத்தை சுத்தப்படுத்தும் முகமாக பற்றைக் காடுகளை வெட்டி சுத்தப்படுத்தினர்.

தற்போது குறித்த துயிலும் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் தரவை இராணுவ முகாம் அமைந்துள்ளதுடன், கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.