முதலூர் முழகத்தினை வெற்றி கொண்டது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா

(படுவான் பாலகன்) முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தினால் முதலூர் முழக்கம் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தினர் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
உயிரிழந்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும், விளையாட்டுக்கழகத்தின் 56வது ஆண்டு நிறைவினையும் முன்னிட்டு முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஞாயிறு(25) மற்றும் திங்கள்(26) ஆகிய இரண்டு தினங்கள் நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் 26விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று, இறுதிப் போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரும், கரவெட்டி ஆதவன் அணியினரும் தெரிவாகி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினர் கரவெட்டி ஆதவன் அணியினருக்கு எதிராக இருகோள்களை இட்டு முதலிடத்தினை பெற்றுக் கொண்டனர்.
போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற விளையாட்டுக்கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணம், பணப்பரிசு மற்றும் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பந்துக்காப்பாளர், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றவர்களுக்கும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.