நாட்டுக்கு பயன்படாத தூதரகங்கள் பூட்டு

நாட்டுக்கு பயன்படாத வகையில் வெளிநாடுகளில் திறக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தூதரகங்கள் மூடப்படவுள்ளதுடன், திறமையற்ற இலங்கைத் தூதுவர்கள் மூவர் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் நாட்டுக்குப் பயனற்றவையாக இருக்க முடியாது. அப்படியானவற்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும். திறமையற்றவர்கள் இருப்பார்களாயின் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்கவுள்ளோம். நாட்டு மக்களின் பணத்தை விரயம் செய்யும் வகையில் வெளிநாடுகளில் தூதரகங்களை நடத்த முடியாது. பொருத்தமற்ற தூதுவர்கள் மூவர் ஏற்கனவே நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்கள. எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கை தூதுவர்களும் நாட்டுக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்படும். இது இரண்டு நாள் செயலமர்வாக முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

வர்த்தக இராஜதந்திரத்தை பிரசாரம் செய்யும் நோக்கில் அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். 63 தூதரகங்கள் வெளிநாடுகளில் உள்ளன. இவற்றில் சில தரமுயர்த்தப்படவிருப்பதுடன், தேவையற்ற தூதரகங்கள் மூடப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.