கட்டாரில் இலங்கையர் பாதிக்கப்படவில்லை

கட்டாரில் நிலவும் தற்போதைய நிலைமை காரணமாக எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்குள்ள இலங்கையரின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதுஎன்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர் வர்த்தக ரீதியில் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்  கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூநியதாவுது:
வர்த்தக ரீதியில் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளிலிருந்து நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை காலம் வீழ்ச்சி கண்டிருந்த இலங்கை ஏற்றுமதி துறை, ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள பெற்றுக்கொண்டதன் மூலம், அந்தத் துறையை புத்துணர்ச்சியுடன் மீள கட்டியெழுப்ப முடியும்.
இதன்மூலம், பொதுமக்களுக்கு உச்சளவு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
இலங்கையின் தூதரக அலுவலகங்களை முறையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும.; இதற்கமைவாக 63 ஆக உள்ள இலங்கை தூதரகங்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்துத் தூதரகங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.
அவை தொடர்பாக மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படும். திறமையற்ற தூதுவர்களை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான தூதுவர்கள் மூன்று பேர் திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 4ம் திகதி தூதுவர்களுக்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறுவுள்ளது. இதற்காக அனைத்துத் தூதுவர்களும் அழைக்கப்படவுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.