சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை

கடந்த சில நாட்களாக பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்..

இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதுடன், அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீரழிவாகவாக கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (25) பிற்பகல் களுத்துறை விகாரை வளாகத்தில் நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து இனங்களுக்குமிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் அமைதியான, சமாதானமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக மதகுருமார்கள் முன்னின்று செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை அமரபுர பிரிவின் துறவிகள் இன்றிலிருந்து ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை களுத்துறை விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
அமரபுர பிரிவின் இலக்கிய நூல் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள 98 பேர்ச்சஸ் காணியை அமரபுர பிரிவிற்கு வழங்கும் உறுதிப்பத்திரம் ஜனாதிபதி அவர்களால் வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரரிடம் வழங்கப்பட்டது.

வண.கொட்டகொட தம்மாவாஸ தேரர், தெடம்பஹல சந்ரசிறி தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.