விண்ணப்பம் கோரல் – குறும்படத்துறை விருது வழங்கும் விழா 2017

(-க. விஜயரெத்தினம் )

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறும்படத்துறையை ஊக்குவித்தலும் அதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்துறையை மேம்படுத்துதலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அதிகார சபையினால் குறும்படத்துறை விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இவ்விழாவில்  சிறந்த படைப்பு ,சிறந்த படைப்பாளி, சிறந்த ஒப்பனையாளர், நெறியாளர், படப்பிடிப்பாளர்,காட்சியமைப்பாளர், கதை வசன கர்த்தா, இசையமைப்பாளர், பாடகர், பாடகி, பாடலாசிரியர்,எடிரிங், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, குழந்தை நட்சத்திரம்,கதைப்பிரதியாக்கம், ஒலி, ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளம் படைப்பாளிகளின் தங்களது திறன்களை இத்துறையில் வெளிக்காட்டிவரும் சூழலில் அவர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவப்பதோடு இத்துறையினூடாக இளம் தலைமுறையினர் தனது வாழ்வாதாரத்திற்கான துறையாக இத்துறையை பயன்படுத்திக் கொள்வதற்கான வலுவூட்டல்களையும் வாய்ப்புக்களையும் வழங்க வேண்டிய தேவையுள்ளது.
இத்துறை சார்ந்த ஏனைய துறைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இக் கலைஞர்களின் கலை வேட்கைக்கும் தேடலுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  அதிகார சபையின் செயலாளர் எம.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.
மாவட்டம் சார்ந்த ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக விருது பெறும் சிறந்த கலைஞர்கள் இம் மாவட்டத்தில் உருவாக்கப்படும் திரைத்துறை ஆளணியினராக செயற்படுவதோடு அதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இப்போட்டிக்கு பொழுதுபோக்கு , குடும்பசூழல், சமூக விழிப்புணர்வு, கல்வி, பெண் உரிமை,சிறுவர் உரிமை, பக்தி இலக்கியம், போதைப்பொருள் பாவனை, உளவியல் பிரச்சனை, வயோதிப சமூகம், இளைஞர் பிரச்சனை, எமது கலை , கலாச்சாரம், அரசியல், கலைப்படைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் குறும்படங்களை அனுப்பி வைக்க முடியும்.
போட்டி நிபந்தனைகள், வயதுக் கட்டுப்பாடு இல்லை, விண்ணப்பதாரி இம் மாவட்டத்தினை நிரந்தர வசிப்பிடமாக அல்லது பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும், ஒருவர் எத்தனை குறுந்திரைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால் தனித்தனி விண்ணப்பங்கள், ஒரு இறுவட்டில் ஒரு குறும்படமே பதியப்பட வேண்டும். வெளியிட்ட காலம், குறுந்திரைப்படப்பெயர்,திகதி, மாதம், வருடம், வெளியிட்ட இடம், வெளியிட்டு வைத்தவர் விபரம், பங்குபற்றியோர் பெயர் விபரம் என்பன இறுவட்டில் இடம் பெறுவதோடு ஏ4 தாளில் இவ் விபரங்கள் தட்டச்சு செய்யப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.
ஒரு விண்ணப்பத்திற்கான கட்டணம் 500 ரூபா, குறுந்திரைப்பட கருப்பொருள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 15 நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதி 16.07.2017.
விண்ணப்பப்படிவங்கள் பிரதேச செயலகங்களில் உள்ள கலாச்சாரப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்கள் பொருளாளர், மாவட்ட கலாச்சார அதிகார சபை, எனும் பெயரில் பெறப்பட்ட காசுக்கட்டளையுடன் பதிவுத்தபாலில் இணைப்பாளர், மாவட்ட கலாச்சார அதிகார சபை,மாவட்டச்செயலகம், மட்டக்களப்பு என்ற விலாசத்துக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.