தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை உடைத்து சின்னாபின்னமாக்கி பேரினவாத எஜமானருக்குத் தீனி போட ஒரு சிலர் விரும்புகிறார்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்துக்கொண்டு வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு யாராவது முயற்சித்தால் அவர்கள் தமிழ் மக்களால் தனிமைப்படுத்தப்பட்டு தோல்வியடைவார்கள் என்பது கடந்த கால வரலாறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சிலர் தமது அரசியல் தேவைக்காக சிலரைக் குழப்பியடித்து¸ தமது பக்கம் இழுத்து ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ்ப்¸ பதுங்கி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். இவ்வாறான நிலைமை ஒரு போதும் வெற்றியளிக்காது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் கருமாரி அம்மன் ஆலயத்தில்¸ வாயில் கோபுரம் நிருமாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வான இன்று (25) ஞாயற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்மி யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்..

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகள் இணைந்த ஒரு கட்சியாகும். மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  என்றே நினைக்கிறார்கள்.

கடந்த காலத்தில் தனித்து நின்று போட்டியிட்ட ஒருசில கட்சிகள் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலை காணப்பட்டது. 2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையின் விளைவால் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த வரலாறுகளும் உண்டு. சில கட்சிகள் தங்களால் முன்பு பெறமுடியாத வெற்றிகளைப் பெறுவதற்கு, ஒற்றுமையே காரணமாக இருந்தது.

கடந்த காலத்தில் மிகவும் பலம் பொருந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவடைந்ததன் காரணமாக தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது. இது மக்களுக்குப் பாடமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து சிதறிப்போவதை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை உடைத்து சின்னாபின்னமாக்கி பேரினவாத எஜமானருக்குத் தீனி போட ஒரு சிலர் விரும்புகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அவர்களுடன் இருந்து சல்லாபம் அடித்தவர் 18ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்து, தமிழ் மக்களை கொத்தடிமைகள் போல் வைத்திப்பதற்காக கடந்த அரசு விரும்பிபோது அதற்கு ஆதரவாக கைதூக்கியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறார்.

அவர் மலையக மக்களால் தூக்கி எறியப்பட்டு  தற்போது மட்டக்களப்பில் மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறார். இவருக்கு அனுசரணையாக ஒரு சில அதிகாரிகள் தமது ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கு இவருடன் இணைந்து செயற்படுகிறார்கள். எமது மக்கள் போலிகளை ஒரு போதும் நம்பவேண்டாம். என்றார்.